நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் என்கிற கொடிய நோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தனக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என ரசிகர்களுக்கு  நடிகர் இர்ஃபான் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாலிவுட்டில் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் இர்பான் கான். சிறந்த கதைகளை தேர்வு செய்து, நல்ல படங்களை வழங்கி ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தையே பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி, ‘ஸ்லம்டாக் மில்லியனேர்’ படத்தில் நடித்து ஹாலிவுட் வரை பிரபலமாகி, ‘தி அமேசிங் ஸ்பைடர்மேன்’, ‘ஜுராசிக் வோர்ல்ட்’, ‘லைப் ஆப் பை’ உள்ளிட்ட பிரம்மாண்ட ஹாலிவுட் படங்களில் நடித்து பல்வேறு பாராட்டுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவருக்கு கொடிய நோய் தாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக  இர்ஃபான் கான் தனது  டுவிட்டரில், தான் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அது உறுதியானதும் தெரிவிப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த  நோயில் இருந்து மீள விட்டுக்கொடுக்காமல் போராடுவேன். என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள் உறுதுணையாக உள்ளனர். என்ன நோய் என்பதை 10 நாட்களில் உறுதி செய்த பின்னர் அறிவிப்பேன் என கூறியிருந்தார். இப்போது, நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என உறுதி செய்து உள்ளார். 

எதிர்பாராத நிகழ்வுகள்தான் நம்மை வளரச் செய்கிறது, அதனைத்தான் கடந்த சிலநாட்களாக உணர்ந்து வருகிறேன். நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் நோயால் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்வது என்பது கடினமானது, ஆனால் என்னை சுற்றியிருப்பவர்களின் அன்பும், பலமும், என்னுள் இருக்கும் பலமும் என்னை நம்பிக்கைக்கு கொண்டு வந்து உள்ளது என இர்ஃபான் கான் தெரிவித்துள்ளார்.

நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இதிலிருந்து மீள்வதற்காக சிகிச்சைக்கு வெளிநாடு செல்லவிருக்கிறேன். எல்லோரும் தங்களுடைய அன்பையும், வாழ்த்தையும் அனுப்புங்கள்” என தெரிவித்து உள்ளார்.

அவருடைய இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இர்ஃபான் கான் குணமடைய வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.