பிறந்தநாள் கேக்கை வாளால் வெட்டிய பிரபல நடிகர் மீது காவல்துறையினர் அதிரடியாக வழக்கு பதிவு செய்து, நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் கன்னட திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டத்தை பிரபலங்கள் ஆடம்பரமாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்கிற நினைப்பில், ஏதாவது செய்து சர்ச்சையிலும் சிக்குவது, வழக்கமாகி வருகிறது.

அந்தவகையில், கன்னட நடிகர் துனியா விஜய், சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடினார்.  வீட்டின் முன்பு பந்தல் போட்டு ரசிகர்கள் மற்றும் தன்னுடைய குடும்பத்தினர் முன்னிலையில் கேக்கை வாளால் வெட்டினார். 

இது குறித்த வீடியோ... சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இந்த வீடியோவின் அடிப்படையில் தற்போது போலீசார் இவர் மீது வழக்கு தொடர்ந்து, இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 

இதில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், வாளால் (ஆயுதம்) கொண்டு கேக் வெட்டியதன் காரணம் குறித்தும் கேள்வி எழுப்பி அதற்கான காரணமும் கேட்கப்பட்டுள்ளது.

போலீசாரின், நோட்டீஸுக்கு  நடிகர் துனியா விஜய், நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்ததாக கூறப்படுகிறது. எனினும் வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நடிகர் துனியா விஜய் வாளால் கேக்கை வெட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளது அவருடைய ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.