கேரளாவில் 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகை ஒருவரை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் முக்கிய குற்றவாளியாக, அந்த நடிகையிடமே, வேலை செய்த, பல்சர் சுனில் என்பவர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

மலையாள நடிகர் திலீப்புக்கும் இந்த கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால். அவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் 85 நாள் சிறைவாசத்திற்குப் பின்னர் திலீப் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். முன் அனுமதி இல்லாமல் வெளிநாட்டுக்குச் செல்லக் கூடாது,சாட்சிகளை மிரட்டக் கூடாது என்பன உள்படப் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆனால் இந்த நிபந்தனைகளை மீறி நடிகர் திலீப் சாட்சிகளை மிரட்டியதாகப் புகார் எழுந்தது.

 

இந்த வழக்கில் அப்ரூவராக மாறிய விபின் லால் என்பவரை மிரட்டியதாகக் கூறி, அரசு தரப்பு தாக்கல் செய்த மனுவை கொச்சி கூடுதல் சிறப்பு அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து கேரள அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தற்போது 6 மாதத்திற்குள் வழக்கை முடிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. எனவே சுமார் 4 வருடங்களுக்கு மேலாக, நீண்டு கொண்டே இருக்கும் இந்த வழக்கு இன்னும் 6 மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என்பது உறுதியாகியுள்ளது.