தமிழ் திரையுலகத்தில், வெற்றி இயக்குனராகவும் செம்ம பிஸியான இயக்குனராகவும் வலம் வந்துகொண்டிருப்பவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் தனுஷை வைத்து இயக்கி வெளியான 'அசுரன்' படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் தனுஷுடன் மற்றொரு படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தனுஷை வைத்து, ஆடுகளம், வடசென்னை, அசுரன் என மூன்று சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்துள்ளார் வெற்றி மாறன். இந்த மூன்று படங்களுமே தனுஷின் திரையுலகில் ஒரு மைல் கல் என்றே கூறலாம்.

இந்நிலையில் 'அசுரன்' படத்திற்கு பின், சூர்யாவின் 'வாடி வாசல்' படத்தை வெற்றிமாறன் இயக்குவதாக அதிகார பூர்வ தகவல் வெளியானது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் தாணு தயாரிக்க உள்ளார். மேலும் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதுமட்டும் இன்றி, நடிகர் சூரியை வைத்து ஒரு படத்தையும் வெற்றிமாறன் இயக்கி வந்தார். இந்த படத்தின் சில காட்சிகள் வெளிநாட்டில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக முடங்கியுள்ளது. மீண்டும் திரைப்பட பணிகள் துவங்கியதும், சூரியின் படத்தையும், சூர்யாவின் வாடிவாசல் படத்தையும் முடித்த கையேடு, தனுஷை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவேளை இந்த படம் பலர் எதிர்பார்க்க கூடிய வடசென்னை படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும், அல்லது புதிய கதையாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.