நடிகர் சங்க தேர்தல் திமுக – அதிமுக என்று இல்லாமல் எடப்பாடி – ஓபிஎஸ் இடையிலான தேர்தலாகிவிட்டதாக கிசுகிசுக்கிறார்கள்.

நடிகர் விஷாலை ஒழித்துவிட வேண்டும் என்பது தான் எடப்பாடி பழனிசாமி தரப்பின் பிரதான எண்ணமாக இருப்பதாக சொல்கிறார்கள். இதனால் தான் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தலை நடத்தாமல் சிறப்பு அதிகாரியை நியமித்து அதனை தமிழக அரசு தனது நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்துவிட்டது. இதனை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு விஷால் நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவார் என்று எடப்பாடி தரப்பு நினைத்தது.

 

ஆனால் அதற்கு மாறாக நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் களம் இறங்கி கடந்த முறையை காட்டிலும் மிகத் தீவிரமான பிரச்சாரத்தை அவர் முன்னெடுத்தார். இதனால் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்று கணக்கு போட்ட ஐசரி கணேஷ் தரப்பு மீண்டும் எடப்பாடி தரப்பை அணுகியது. இதனை தொடர்ந்தே தேர்தல் ரத்து என்கிற அறிவிப்பு வெளியானது. 

தமிழக அரசின் ஆசி இல்லாமல் நடிகர் சங்க தேர்தல் ரத்து அறிவிப்பு வெளியாகியிருக்காது என்பது அறிந்த ஒன்று தான். ஆனால் உயர்நீதிமன்றம் சென்ற விஷால் நீதிபதிகள் மூலமாக தீர்ப்பை பெற்று தேர்தலை நடத்தி காட்டினார். ஆனால் இந்த விவகாரத்தில் கடைசியில் விஷால் தரப்புக்கு ஓபிஎஸ் உதவிக் கரம் நீட்டியதாக சொல்கிறார்கள். நாசர் மற்றும் சிலர் ஓபிஎஸ்சை சந்தித்து பேசியுள்ளனர். 

அப்போது கண்டிப்பாக உதவுவதாக கூறிய ஓபிஎஸ் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வம் இல்லாமல் உடனடியாக சென்னை கமிஷ்னரை தொடர்பு கொண்டு நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு அளிப்பதில் என்ன சிக்கல் என்று சந்தேகம் எழுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்தே போலீசார் பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். எடப்பாடி ஐசரி கணேஷ் பின்னால் இருப்பதை அறிந்தே விஷால் தரப்புக்கு ஆதரவாக ஓபிஎஸ் தரப்பு களம் கண்டதாக சொல்கிறார்கள். 

எது எப்படியோ தேர்தல் பிரச்சனை இல்லாமல் முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தற்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.