பிரபல நடிகர் ஆர்யா,  இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான 'அறிந்தும் அறியாமலும்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.  தமிழில் பல படங்களில் நடித்துள்ள இவருக்கு திரையுலகில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் இயக்குனர் பாலா இயக்கத்தில் ஆர்யா நடித்த 'நான் கடவுள்' திரைப்படம் எனலாம்.

இதைத்தொடர்ந்து 'ராஜா ராணி' , 'மதராசப்பட்டினம்',  'பாஸ் என்கிற பாஸ்கரன்' போன்ற திரைப்படங்கள் பல ரசிகர்களின் ஃபேவரட் திரைப்படங்கள்.  தற்போது 'மகாமுனி', டெடி', 'காப்பான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் காப்பான் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்யா திரையுலகை தவிர ஒரு சைக்கிளிங் ஆர்வலர் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான்.  குறிப்பாக சமீபத்தில் நடந்த நடிகர் சங்க தேர்தலுக்கு கூட, சைக்கிள் மூலம் வந்து தன்னுடைய வாக்குகளை செலுத்தினார். மேலும் இவரும், இவருடைய நண்பர் சந்தானமும் ஞாயிறு தோறும் சென்னையிலிருந்து மகாபலிபுரம் வரை சைக்கிளிலேயே சென்று திரும்புவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

ரசிகர்களையும் ட்விட்டர் மூலமாக சைக்கிளிங் செய்யுமாறு பலமுறை ஊக்குவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ஆர்யா, மற்றும் அவருடைய சைக்கிளிங் அணியினர்,  பிரான்ஸ் நாட்டில் நடைபெற உள்ள, நீண்ட தூர சைக்கிள் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். 

இந்த போட்டியில், 1200 கிலோ மீட்டர் தூரத்தை ஒரு அணியாக கடக்கவேண்டும்.  இம்மாதம் இப் போட்டி நடைபெற உள்ளது. இதில், ஆர்யாவின் அணியும் கலந்துகொள்ள இருக்கிறது.  இப்போட்டியில் கலந்து கொள்ளப்போகும் ஆர்யாவின் அணிகளுக்கான ஜெஸ்ஸியை  நடிகர் சூர்யா அறிமுகம் செய்து வைத்துள்ளார்.  ஆரிய அணி சிறப்பாக சைக்கிளிங் செய்து வெற்றி பெற தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் சூர்யா.  

 

பிரான்ஸ் நாட்டில் ஆகஸ்ட் 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நடைபெறும் இந்த சைக்கிள் போட்டியில் சுமார் 6 ஆயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் நடிகர் அஜித், கோயம்புத்தூரில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு அடுத்த கட்ட போட்டிக்கு தயார் ஆனதை அடுத்து, ஆர்யாவும் இதே போல் ஒரு போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். இவருக்கும் ரசிகர்கள் தொடந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.