நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஸீ ஷெல் உணவகத்தில் ஐடி ரெய்டு நடைபெற்று வரும் நிலையில், அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.
Arya Opens Up about IT Raid : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் கோலிவுட்டில் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அண்மையில் சந்தானம் நாயகனாக நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் என்கிற ஹாரர் திரைப்படத்தையும் நடிகர் ஆர்யா தான் தயாரித்து இருந்தார். இப்படம் கடந்த மே 16ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இருந்தது. இப்படத்தை பிரேம் ஆனந்த் என்பவர் இயக்கி இருந்தார். இப்படம் தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
இதனிடையே இன்று காலை நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமாக சென்னை அண்ணாநகர் மற்றும் வேளச்சேரியில் உள்ள ஸீ ஷெல் ஹோட்டலில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியானது. அந்த உணவகத்தில் வரி ஏய்ப்பு ஏதேனும் நடந்துள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்த விவகாரம் சோசியல் மீடியாவிலும் காட்டுத்தீ போல் பரவியது. ஆர்யா ஹோட்டலில் ஐடி ரெய்டு என்பது தான் இன்று கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக் ஆக இருந்து வந்தது.

அது என்னுடைய ஹோட்டல் இல்லை - ஆர்யா
இந்நிலையில், இந்த ஐடி ரெய்டு குறித்து நடிகர் ஆர்யா விளக்கம் அளித்துள்ளார். அதில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தும் உணவகத்துக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ரெய்டு நடக்கும் உணவகங்கள் வேறொருவருடையது என அவர் கூறி இருக்கிறார். இதனால் ரசிகர்களும் குழம்பிப் போய் உள்ளனர். ஸீ ஷெல் ஹோட்டல் ஆர்யா உடையது தான் என்று பல பேட்டிகளில் அவரே கூறி இருக்கிறார். அப்படி இருக்கையும் அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவர் ஏன் சொன்னார் என குழம்பி இருந்தனர்.
ஆனால் உண்மை என்னவென்றால், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நடிகர் ஆர்யா ஸீ ஷெல் ஹோட்டலை நடத்தி வந்துள்ளார். ஆனால் அந்த ஹோட்டலை தற்போது வேறொருவர் வாங்கிவிட்டாராம். சில ஆண்டுகளுக்கு முன் ஆர்யாவிடம் இருந்து ஸீ ஷெல் ஹோட்டலை குன்ஹி மூசா என்பவர் இந்த ஹோட்டலை வாங்கியதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக தான் ஆர்யா, தனக்கு அந்த ஹோட்டலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என கூறி இருக்கிறார்.
