’நடிகர் விஜய்யின் ‘பிகில்’படத்தை எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்துகொள்ளுங்கள். ஆனால் அவரைத் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது, குறிப்பாக தாத்தா நடிகர் என்று சொல்லுவதெல்லாம் அநாகரிகமான செயல்’என்று தான் நடித்த படத்துக்கு  வக்காலத்து வாங்குகிறார் வில்லனாக  இருந்து சமீபகாலமாக காமெடியனாக மாறிவரும் ஆனந்தராஜ்.

நேற்று தனது பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த ஆனந்தராஜ், "விஜய் என்ற ஒற்றை மனிதருக்காகத்தான் மக்கள் திரையரங்குக்கு வந்து படம் பார்க்க வருகிறார்கள். அந்த மேஜிக் விஜய்க்கு மட்டும்தான். பிகில் படத்தை வேண்டுமானால் விமர்சியுங்கள். ஆனால், விமர்சனத்தின்போது 'விஜய்  தாத்தா ஆகிவிட்டார்' என  தனி மனித விமர்சனம் செய்வது அநாகரிகமானது. இந்த பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறேன். பிகில் படத்தின் வெற்றிக்கு ஒரே காரணம் தம்பி விஜய் மட்டும்தான்" என கூறியுள்ளார்.ஆனந்தராஜ் யாரை குறிப்பிட்டு இந்த கருத்தைச் சொன்னார் எனத் தெரியாமல் நெட்டிசன்கள் குழம்பியுள்ளனர். விஜய் தாத்தா ஆகிவிட்டார் என யார் கிண்டல் செய்தது எனத் தெரியவில்லை. சிலர், புளூ சட்டை மாறனை மனதில் வைத்துதான் ஆனந்தராஜ் இப்படிப் பேசியிருக்கிறார் என கூறி வருகின்றனர்.

இன்னொரு விமர்சனத்தைப் பற்றியும் ஆதங்கப்பட்ட ஆனந்தராஜ்,’ராயப்பன் கேரக்டர் ’பிகிலேஏஏஏ’என்று வித்தியாசமாக சவுண்ட் விட்டதைக் கிண்டலடித்து தயாரிப்பாளர் ஒரு விக்ஸ் மிட்டாய் கூட வாங்கித்தர முடியவில்லையா? என்று கிண்டலடிக்கிறார்கள். இதுபோன்ற தனிமனித விமர்சனங்களையெல்லாம் இனி சகித்துக்கொள்ளமுடியாது’என்றார். இப்படத்துக்கு 80 நாட்கள் வரை கால்ஷீட் வாங்கிவிட்டு தன்னை டம்மி ஆக்கிவிட்டார் அட்லி என்று புலம்பிக்கொண்டிருந்த ஆனந்தராஜ் எப்போது சமாதானம் ஆனார் என்று தெரியவில்லை.