தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் பட்டையை கிளப்பி வருபவர் நடிகர் ஆனந்தராஜ். இவரது தம்பி கனகசபை கடந்த 5ம் தேதி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். புதுச்சேரி கோவிந்த சாலை திருமுடி நகரில் வசித்து வந்த கனகசபை (55) வீட்டின் படுக்கை அறையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியது. அவர் ஏலச்சீட்டு நடத்தி வந்ததாகவும், அதில் கோடிக்கணக்கில் பணத்தை இழந்ததால் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. 

ஆனால் அதை முற்றிலும் மறுத்துள்ள ஆனந்தராஜ், தனது தம்பியின் தற்கொலைக்கான உண்மையான காரணத்தை போட்டுடைத்துள்ளார். கனகசபை ஏலச்சீட்டில் நஷ்டம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர் சமீபத்தில் புதிதாக ஒரு வீடு வாங்கியிருந்தார். அது தொடர்பாக சிலர் அவரை தொடர்ந்து மிரட்டி வந்தனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். 

இந்த தகவல்கள் அனைத்தையும் ஆனந்த ராஜின் தம்பி கனகசபை ஒரு கடிதத்தில் எழுதியுள்ளதாகவும், அதை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது தம்பியின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து போலீசார், கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டுமென்றும் கோரிக்கைவிடுத்துள்ளார்.