தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிராங்க் ஷோ நடத்தும் குழுவில் அமலாபால் இருக்கிறார். அந்நிகழ்ச்சியில் அவர்கள் செய்யும் அடாவடிகள் மற்றும் அதன் விளைவுகள்தான் ’ஆடை’ என்கிற பரிதாபமான சோடை.

தமிழகத்தின் தென்கோடியில் நடந்த தோள்சீலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மார்பை மறைக்கும் உரிமைக்காக மார்புகளை அறுத்தெறிந்த பெண்ணின் அறிமுகத்தோடு படம் தொடங்குகிறது. அப்படிப் போராடிப் பெற்ற உரிமை இது. அதை அலட்சியம் செய்யாதீர்கள் என்கிற கருத்துடன் படம் தொடங்கும்போது டைரக்டர் ஏதோ ஒரு பயங்கரமான அறிவிஜீவியா இருப்பார் போல இருக்கே என்றொரு திகைப்பு ஏற்படுகிறது. ஆனால் படம் முடியும்போது அவர் அரைவேக்காட்டுக்கும் சற்று கீழே என்று சொல்லும்படியான காட்சி அமைப்புகள்.

அமலாபால் அதிரடி நாயகியாக அறிமுகம் ஆகிறார். பைக் ரேஸ், மதுப்பழக்கம், வாயைத்திறந்தாலே கெட்ட வார்த்தை  என்று இக்கால இளைஞர்களுக்குச் சவால் விடுகிற வேடம். உயர்நடுத்தர வகுப்புப் பெண்களின் பிரதிநிதி போல் இருக்கிறார்.அதற்கு மிகப்பொருத்தமாக நடித்திருக்கிறார். உடை இல்லாமல் நிர்வாணமாக இருப்பதை உணரும் நேரத்தில் அவர் மீது எந்த வித பரிதாபமும் ஏற்படவில்லை என்பதன் காரணமும் விளங்கவில்லை.

ரம்யா, விவேக்பிரசன்னா, ஸ்ரீரஞ்சனி, அனன்யா ராம்பிரசாத் ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.விஜய்கார்த்திக்கண்ணனின் ஒளிப்பதிவு கண்களை உறுத்தவில்லை.

பிரதீப்குமாரின் இசையில் பாடல்கள்  இரைச்சல் கேட்கும் ரகம். பாடல்வரிகள் படத்தின் கருத்தைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருக்கின்றன.க்ரைம் த்ரில்லர் படங்களுக்கே உரிய பல்வேறு நபர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி கடைசியில் யாரும் எதிர்பாராத ஒருவரைக் கொண்டுவந்து இவர்தான் காரணம் அதற்கு இதுதான் காரணம் என்கிற திரைக்கதை வடிவம்தான் இந்தப்படத்திலும் இருக்கிறது.

ஒரு எக்ஸாம்தானே என்கிற அமலாபாலின் அலட்சியக் கேள்விக்குப் பொங்கியெழுந்து அனன்யா சொல்லும் பதில்கள் ஒவ்வொன்றும் நெத்தியடி.வயதுவந்தவர்களுக்கான படம் என்பதால் நிறைய இரட்டை அர்த்த வசனங்கள் புழங்குகின்றன. அதற்காக ‘அய்யா மேல படுத்திருக்காரு...அம்மா கீழ படுத்திருக்காக...நான் விளக்கு புடிச்சிக்கிட்டிருக்கேன்’ என்று வேலைக்காரி சொல்லும் வ்வசனத்தையெல்லாம் அனுமதித்த சென்சார் ஒரு சுத்த நான்சென்ஸார்.

இயக்குநர் ரத்னகுமாருக்கு பெண்ணுரிமை பற்றிய புரிதல் பூஜ்ஜியம் என்பதை எல்லா காட்சிகளிலும் வசனங்களிலும் காட்டிவிட்டார். கிரிமினலாக யோசித்து ஒரு படம் எடுப்பதெல்லாம் ஓகே.தான். ஆனால் அதில் கொஞ்சமாவது சுவாரசியம் இருக்கவேண்டாமா? மொத்தத்தில் ‘ஆடை’ இயக்குநர் ரத்னகுமாரும் அமலா பாலும் தங்களுக்குத் தாங்களே கட்டிக்கொண்ட பாடை.