’சின்ன பட்ஜெட் படங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்று அடிக்கடி திரையரங்க உரிமையாளர்கள் மீது வைக்கப்படும் அபத்தமான குற்றச்சாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றேன்’என்கிறார் பிரபல திரையரங்கு உரிமையாளர் பன்னீர்ச்செல்வம். ’மிக மிக அவசரம்’படத்துக்கு தொடர்ந்து தியேட்டர்கள் கிடைக்காதது குறித்து கண்டனம் வெளியிட்டவர்களுக்கு அவர் காட்டமாக பதிலளித்தார்.

சிவகாசி முருகேசன் தயாரிப்பில், இயக்குநர் சுசி ஈஸ்வர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தேடு'. சஞ்சய், மேக்னா உள்ளிட்ட பல புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று  சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பாக்யராஜ், திரையரங்கு உரிமையாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அவ்விழாவில் பேசிய பன்னீர்ச்செல்வம் சிறுபடங்களுக்கு திரையரங்க உரிமையாளர்கள் முறைப்படி தியேட்டர்கள் ஒதுக்குவதில்லை என்ற குற்றச்சாட்டை கடுமையாக மறுத்தார்.

அப்போது பேசிய அவர்,’அனைத்து படங்களுமே வெற்றியடைய வேண்டும் என்பது தான் திரையரங்க உரிமையாளர்களின் எண்ணம். எந்தப் படமும் தோல்வியடைய வேண்டும் என நாங்கள் நினைப்பதில்லை. படங்கள் வெற்றியடைந்தால் மட்டுமே எங்களுக்கு வருமானம். ஒரு படம் வெற்றியடைய வேண்டும் எனப் பிரார்த்திப்பது திரையரங்க உரிமையாளர்கள் தான்.ஆனால், திரையரங்க உரிமையாளர்கள் மீது ஒரு சாயம் பூசப்படுகிறது. எதார்த்தம் என்னவென்று புரியாமல் பேசுவது தான் வருத்தமாக உள்ளது. சிறிய படங்களுக்குத் திரையரங்குகள் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டைத் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டே இருக்கிறீர்கள்.

1980-களில் தமிழகத்தில் மக்கள் தொகை 2 கோடிக்கும் குறைவாகவே இருந்தது. அப்போது வருடத்துக்கு 80 படங்கள் வந்து கொண்டிருந்தன. அந்தச் சமயத்திலிருந்த திரையரங்குகளின் எண்ணிக்கை 2800. இன்று தமிழக மக்களின் ஜனத்தொகை 8 கோடியைத் தாண்டிவிட்டது. வருடத்துக்கு 250 படங்கள் வரை வருகின்றன. ஆனால், திரையரங்குகளின் எண்ணிக்கை 960 தான். இப்படியிருக்கும் போது எப்படி உங்களுக்குத் திரையரங்குகள் கிடைக்கும் என நினைக்கின்றீர்கள்?

திரையரங்க உரிமையாளர்கள் மீது வைக்கப்படும் அபத்தமான குற்றச்சாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றேன். கடந்த வாரம் 5 சிறிய படங்கள் வெளியானது. அதில் 4 படங்களுக்குத் திரையரங்குகள் கிடைத்தது. 1 படத்துக்குக் கிடைக்கவில்லை. அது யாருடைய குற்றம்?. ஒவ்வொரு வாரமும் 9 படங்கள் வர வெளியிடுகின்றீர்கள். எப்படி அனைத்துக்கும் திரையரங்குகள் கொடுக்க முடியும்.

நாங்கள் அரசாங்கத்திடம் போராடிக் கொண்டிருக்கின்றோம். பெரிய திரையரங்குகளை எல்லாம் சிறிய திரையரங்குகளாக மாற்ற அனுமதிக் கொடுங்கள் எனக் கூறி வருகிறோம். அரசாங்கத்திடம் மோதிப் பார்த்து நாங்களும் அழுத்துவிட்டோம். அது தயாரிப்பாளர்கள் நினைத்தால் முடியும். அரசாங்கத்திடம் அவர்கள் இணக்கமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களோ திரையரங்க உரிமையாளர்களைக் குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள். தீபாவளிக்கு வரும் 2 படங்களுமே, இருக்கும் 800 திரையரங்குகளை ஆக்கிரமித்துவிடும்.

அந்தப் படங்கள் 3 வாரம் வரை ஓடும். அந்தச் சமயத்தில் வெளியாகும் சிறிய படங்களுக்கு மக்கள் வரமாட்டார்கள். மக்கள் மனநிலையிலும் மாற்றம் வரவேண்டும். பெரிய படங்களை மட்டுமே பார்ப்பது என்ற தவறான எண்ணத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிறிய படங்கள் நன்றாக இருக்கிறது என்ற பேச்சு வெளியாகி, மக்கள் வருவதற்குள் வசூல் இல்லை எனத் திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்துவிடுகிறார்கள். திரையரங்கு உரிமையாளர்களின் நிலையையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

எதார்த்தத்தை உணர்ந்து, திரையரங்குகளை அதிகரிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டும். 400 திரைப்படங்கள் வெளியிடுவதற்குத் தயாராக இருக்கின்றன. யாருடைய படங்களையும் நாங்கள் பாகுபாடு பார்ப்பதில்லை. சிறிய படங்கள் வெற்றியடைந்தால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு வருமானம் அதிகம். பெரிய படங்களுக்கு 75% வரை தயாரிப்பாளர்களுக்குக் கொடுத்துவிடுகின்றோம். சிறிய படங்களுக்கு 50% தான் கொடுப்போம். அது எங்களுக்கு லாபம் எனப் புரிந்து கொள்ளுங்கள்’என்றார் பன்னீர்ச்செல்வம்.