கடந்த சனியன்று ரிலீஸாகி சுமாராக ஓடிக்கொண்டிருக்கும் அமலாபாலின் ‘ஆடை’படத்தில் கவிஞர் வைரமுத்துவை மிகவும் அவமானப்படுத்தும் விதமாக ‘மி டு’காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளதால் கவிஞர் தரப்பு கடும்கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அமலா பால் நிர்வாணமாக நடித்திருக்கிற ஒரே காரணத்துக்காக பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் ‘ஆடை’படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஓ.கே., பரவாயில்லை ரகப்படமாகவே வந்து சேர்ந்திருக்கிறது. இப்படத்துடன் வந்த விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’படமும் இதே போல் சுமார் ரகத்தில் இருக்கவே டப்பிங் படமான ‘லயன் கிங்’வசூலில் பட்டையக் கிளப்பி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘ஆடை’படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் கவிஞர் வைரமுத்து,சின்மயி விவகாரத்தை சித்தரிக்கும் வகையில் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. அந்தக் காட்சியின்படி ‘பிராங்க் ஷோக்களில் செய்த தவறுகளில் இருந்து திருந்த விரும்பும் அமலா பால் ஒரு நிருபராக மாறுகிறார். தான் நிருபர் என்று சொல்லிக்கொள்ளாமல் பாடகியாக சான்ஸ் கேட்பதற்காக ஒரு கவிஞரைச் சந்தித்து தன்னை இசையமைப்பாளர்களிடம் அறிமுகப்படுத்தும்படி கேட்க அதற்கு கவிஞர் தன்னிடம் அட்ஜஸ்ட் பண்ணிப்போனால் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி அமலாபாலின் கையை தவறான நோக்கத்துடன் கையைப் பிடித்து இழுக்கிறார் என்று அக்காட்சி போகிறது. இக்காட்சி அப்படியே வைரமுத்து,சின்மயி பஞ்சாயத்தை ஞாபகப்படுத்துவதாகவே இருக்கிறது என்கிறார்கள் படம்பார்த்தவர்கள்.