’ரோஜா’ படத்தில் அறிமுகமானபோது என்னை எப்படி ஆரவாரமாக வரவேற்றீர்களோ அதே போன்ற ஒரு வரவேற்பை என் பட ஹீரோவுக்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ‘99 சாங்ஸ்’ படத்தின் ஹீரோவை அறிமுகப்படுத்தி பதிவு போட்டிருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ’99 சாங்ஸ்’ என்ற  படத்தை ரஹ்மானின் ஒய்.எம்.மூவிஸ் மற்றும் ஜியோ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. 2015ல் அறிவிக்கப்பட்டு இரு வருடங்களுக்கும் மேலாகத் தயாரிப்பில் உள்ள இந்தப் படத்தில் எடில்ஸி, எகான் இணைந்து நடித்துள்ளனர். மற்றும் சில முக்கியப்பாத்திரங்களில் லிசா ரே, மனீஷா கொய்ராலா,இசையமைப்பாளரும் டிரம்மருமான ரஞ்சித் பரோத் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒரு பாடகர் பெரும்போராட்டத்துக்குப்பின் புகழ்பெற்ற  இசையமைப்பாளர் ஆவதுதான் கதையின் ஒன் லைன் என்று தகவல் பரவியபோது, படத்தின் கதாசிரியரும் ரஹ்மானே என்பதால் இப்படம் ரஹ்மானின் சுயசரிதை என்று செய்தி பரவியது. ஆனால் அச்செய்தியை மறுத்த  ரஹ்மான் ’இது ஒரு பாடகம் பெரும்போராட்டத்துக்குப்பின் அனைவரின் மனங்கவர்ந்த ஒரு இசையமைப்பாளராக மாறுவது போன்ற கதைதான்’ என்றார்.

வரும் ஜுன் 21ம் தேதி இப்படம் ஒரே நேரத்தில் தமிழ்,தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸாக உள்ள நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல் முறையாக எஹன் பத் படத்தை வெளியிட்டார். அப்படத்துடன் போட்ட ட்விட்டில்,...மிகவும் திறமை வாய்ந்த ‘99 சாங்ஸ்’ பட நாயகன் எஹன் பத்தை உங்கள் முன் அறிமுகம் செய்து வைக்கிறேன். நான் அறிமுகமான போது எப்படிப்பட்ட ஆதரவை அளித்தீர்களோ அதே போன்ற ஆதரவை என் பட நாயகனுக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன். இப்படம் ஜூன் 21ல் தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் ரிலீஸாகிறது’ என்று பதிவிட்டிருக்கிறார்.

ரஹ்மானின் அறிமுக செய்திக்கு பதிலளித்துள்ள எஹன்,... இதை விட ஒரு நல்ல அறிமுகம் கிடைக்க வாய்ப்பே இல்லை. என் கனவு நனவாகியிருக்கிறது. அதற்காக ரஹ்மான் சாருக்கும் ஜியோ நிறுவனத்துக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’என்று பதிவிட்டிருக்கிறார்.