ரஜினியின் ‘தர்பார்’படத்தில் ஒரு துளி கூட அரசியல் இல்லை. இது முழுக்க முழுக்க காவல்துறை, தாதாக்கள்  சம்பந்தப்பட்ட படம் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார். ரஜினி அரசியல் குறித்து தன்னோடு எப்போதும் விவாதிப்பதும் இல்லை என்கிறார் அவர்.

கடந்த எட்டு ஆண்டுகளாக இமயமலை செல்வதை நிறுத்தி வைத்திருந்த இம்முறை பத்து நாள் பயணமாக ஒருவாரம் முன்பு தன் மகளுடன் ஆன்மிகப்பயணம் சென்றிருக்கிறார். அங்கும் அவரை விடாமல் ரசிகர்கள் துரத்தித் துரத்தி படங்கள் எடுத்துக்கொள்கின்றனர்.

ரஜினி சென்னை திரும்பியதும் அவரை டப்பிங் பேச வைப்பதற்காக போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளில் வெகு மும்முரமாக ஈடுபட்டிருக்கும் இயக்குநர் முருகதாஸ் தற்போது ‘தர்பார்’படம் குறித்து மெல்ல வாய்திறக்க ஆரம்பித்திருக்கிறார். தர்பாரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயர் ஆதித்யா அருணாச்சலம் என்பதாகும். ஆதித்யா முருகதாஸின் மகனின் பெயர் மற்றும் அருணாச்சலம் அவரது தந்தையின் பெயர் என்றும் குறிப்பிட்டு இந்தக் கதாபாத்திரத்துக்கு ஏற்ற பெயராக இது இருக்கும் என்று நினைத்து பெயர் வைத்ததாகவும், கதை முழுக்க முழுக்க போலீஸ் ஸ்டோரி என்றும், இதில் அரசியல் துளியும் இல்லை என்றும் கூறுகிறார் முருகதாஸ்.

படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி இருக்கிறார். ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிப்பதாகவும் கூறியுள்ளார். இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த முருகதாஸிடம் கதையின் ஒன்லைன் என்னவென்று கேட்கப்பட்டபோது, அதை மட்டும் இப்போது சொல்ல இயலாது என்றும் பொங்கல் வரை காத்திருங்கள் என்று கூறுகிறார். படத்தில் அரசியல் என்பது மட்டுமில்லை என்னோடு எப்போதுமே அரசியல் சம்பந்தமாக ரஜினி சார் எதுவுமே பேசியதில்லை’என்கிறார் முருகதாஸ்.