’இந்தி நடிகர் ஹிரிதிக் ரோஷனின் படங்களைப் பார்க்காதே, டிவியில் அவர் பாடல்களை ரசிக்காதே’என்று எச்சரித்த பிறகும் மீறிப் பார்த்த மனைவியை ஒரு காட்டுமிராண்டிக் கணவன் குத்திக்கொன்றான். பின்னர் ஒரு மரத்தில் தொங்கி தானும் தற்கொலை செய்துகொண்டான். 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குயீன்ஸ் பகுதியில் வசித்து வந்தவர் தினேஷ்வர் புதிதத்(33). அவருக்கும் டானி தோஜாய்(27) என்ற பெண்ணுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. பார் ஒன்றில் அட்டெண்டராக வேலை பார்த்து வந்த டானி தோஜாய் ஒரு தீவிர ஹ்ரித்திக் ரோஷன் ரசிகை. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் அவரது படங்களையும், பாடல்களையும் தவறாமல் பார்க்கும் வழக்கம் கொண்டவர். ஆனால் தினேஷ்வருக்கு அது சுத்தமாகப் பிடிக்கவில்லை.

அதையொட்டி கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறுகள் இருந்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தன் கணவர் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாக நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார் டானி தோஜாய். அந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் ஜனவரி மாதம் விசாரணைக்கு வர உள்ள நிலையில், தனது மனைவியை நைஸாகப் பேசி தனது இல்லத்துக்கு வரவழைத்த தினேஷ்வர் அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, அவரது சகோதரிக்கு,...உன் சகோதரியைக் கொலை செய்துவிட்டேன். வீட்டுச் சாவி பூந்தொட்டிக்கு கீழே உள்ளது.எடுத்துக்கொள்ளவும் என்று மெஸேஜ் அனுப்பிவிட்டு, வீட்டுக்கு அருகே இருந்த மரம் ஒன்றில் தானும் தொங்கிவிட்டார்.