இந்தியாவின் 51-வது சர்வதேச திரைப்பட விழா இன்று கோவா மாநிலம் பனாஜியில் தொடங்கியது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மற்றும் கோவா மாநில முதல்வர் பிரமோத் சவாந்த் இதில் கலந்து கொண்டு இந்த விருது விழாவை துவக்கி வைத்தனர். திரைப்பட நடிகர் சுதீப் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

இந்த சர்வதேச விருது விழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20-28 ஆகிய தேதிகளில் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாகவே உலக   மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக இந்த விழா ஒத்திவைக்கப்பட்டது.

 

இந்த சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டிற்கான, இந்திய ஆளுமை விருதுக்கு, இயக்குநரும் நடிகருமான பிஸ்வாஜித் சாட்டர்ஜி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இதனை விழாவின் தொடக்கத்தில்,  மத்திய  தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார்.

இந்த விருதை அறிவித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 2021 மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் தேசிய திரைப்பட விருது விழாவில் இந்த விருது வழங்கப்படும் என்று கூறினார். பிஸ்வாஜித் சாட்டர்ஜி பல. பெங்காலி படங்களில் நடித்து மிகப்பிரபலமாக அறியப்பட்டவர். 

மேலும் 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அசுரன் திரைப்படம் பனோரமா (Panorama) பிரிவில்  இடம் பெறுகிறது. அதே போல் கணேஷ் விநாயகனின் ‘தேன்’ திரைப்படமும்  ஜனவரி 16 முதல் 24 வரை கோவாவில் நடைபெறவிருக்கும் 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு பெரிய திரையில் காட்டப்படும். 

183 இந்திய திரைப்படங்களில் இருந்து 23 திரைப்படங்கள் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு மொழிகளிலிருந்து இந்த திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.