நீங்கள் 50 வயதைக் கடக்காதவர் என்றால் சற்றும் யோசிக்காமல் இந்த செய்தியைக் கடந்து சென்றுவிடலாம்.
நீங்கள் 50 வயதைக் கடக்காதவர் என்றால் சற்றும் யோசிக்காமல் இந்த செய்தியைக் கடந்து சென்றுவிடலாம். தமிழ் சினிமாவின் அற்புதமான காவியங்களுல் ஒன்றான ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் 50 வது பொன்விழா ஆண்டு இது. இதை கவுரவிக்கும் பொருட்டு சென்னை வாணி மஹாலில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார் சிவாஜியின் தீவிர ரசிகரான நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன். 
சிக்கல் சண்முகசுந்தரமாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், பரதநாட்டியக்காரி மோகனாவாக நாட்டியப்பேரொளி பத்மினியும் நடிப்புக்கு இலக்கணம் சொல்லித்தந்த படம் ‘தில்லானா மோகனாம்பாள்’.இன்னொரு பக்கம் நாகேஷும் மனோரமாவும், டி.எஸ். பாலையாவும் தங்கள் வாழ்நாளின் சிறந்த பாத்திரங்களை ஏற்றிருந்த படமாகவும் ‘தில்லானா மோகனாம்பாள்’ திகழ்ந்தது. 1968ல் வெளியாகி தமிழ்சினிமாவின் மாபெரும் கொண்டாட்டமாக அமைந்த படம் இது. கொத்தமங்கலம் சுப்புவின் நாவலை மிக அற்புதமாக ஏ.பி.நாகராஜன் இயக்கியிருந்தார். இந்தப்படத்தின் மலிவுப்பதிப்புதான் கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த, தமிழ்சினிமாவின் அத்தனை வசூல் ரெகார்டுகளையும் தகர்த்த ‘கரகாட்டக்காரன்’. 
கே.வி.மகாதேவனின் இசையமைப்பில் நெஞ்சை அள்ளும் ‘நலம்தானா...’,‘மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன...’ உள்ளிட்ட பாடல்களும் இன்றளவும் பிரசித்தம். இந்த அரிய படத்துக்கு விழா எடுக்கும் பெருபேறை அப்பாஸ் கல்சுரல் அகாடமியுடன் இணைந்து ஒய்.ஜி.மகேந்திரன் தட்டிச்செல்கிறார்.
நாளை மாலை வாணி மகாலில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில் ‘தில்லாமோகனாம்பாள்’ படத்தில் நடித்த மூத்த கலைஞர்கள் சிலர் கவுரவிக்கப்படுகிறார்கள். அப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும், நாதஸ்வர தவில் கச்சேரிகளும் இசைக்கப்படுகின்றன. நடுவில் படத்தின் முக்கியமான சில காட்சிகளும் ஒளிபரப்பப்படுகின்றன. 
பரபரப்பான ‘சர்கார்’ பட ரிலீஸ் சமயத்தில் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கவும் ஆட்கள் இருக்கிறார்களா என்று தெரிந்துகொள்ள நாளை வாணிமகாலுக்கு ஒரு விசிட் அடிக்கவேண்டும்.
