இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'சர்கார்' படம் கடந்த வருடம் திரைக்கு வந்தது.  தற்போது அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவருக்கு 63 வது படம், இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.

படத்திற்கு இன்னும் பெயரிடாத நிலையில் இந்த படத்தில் விஜய் நடித்துள்ள கதாபாத்திரம் மற்றும் மையக் கதை ஆகியவை வெளிவந்து வெளியாகியுள்ளது.  பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்தப் திரைப்படம் தயாராவதாகவும், இதில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஷங்கர் ஏ.ஆர்.முருகதாஸ், வினோத், பேரரசு, ஆகியோர் விஜய்யை வைத்து இயக்க கதையுடன் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் வினோத் தவிர மற்றவர்கள் ஏற்கனவே விஜய் படத்தை இயக்கியவர்கள். இந்த நிலையில் இயக்குனர் மோகன்ராஜாவும் விஜய்  படத்தை இயக்க தயாராகி வருகிறார்.  இதுகுறித்து கல்லூரி விழா ஒன்றில் அவர் பேசியபோது, விஜய் நடித்த 'வேலாயுதம்' படத்தை இயக்கி உள்ளேன். மீண்டும் அவர் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார்.

ஜெயம்ரவியை வைத்து தனி ஒருவன் இரண்டாம் பாகம் படத்தை எடுக்க மோகன்ராஜா தயாராகி வந்தார். இதனால் எந்த படத்தை முதலில் எடுப்பார் என்று இன்னும் முடிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.