கடந்த சில வருடங்களாக மக்கள் அனைவரும் 49 ஓ குறித்த விழிப்புணர்வை பெற்றுள்ளனர். அதாவது போட்டியிடும் வேட்பாளர்கள் யாரையுமே பிடிக்கவில்லை என்றால் 49 ஓ எனும் சட்டப்பிரிவின் மூலம் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்கிற நோட்டா பட்டனை நாம் அழுத்திவிட்டு வாக்குப்பதிவு மையத்தில் இருந்து வெளியே வந்துவிடலாம்.

தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்களின் பெரு முயற்சியால் மக்களுக்கு 49 ஓ குறித்த விழிப்புணர்வு அதிகம் உள்ளது. இந்த நிலையில் தான் 49P எனும் சட்டப்பிரிவு குறித்து சர்கார் படத்தில் நடிகர் விஜய் பேசியிருக்கிறார. 49 ஓ கேள்விப்பட்டு இருக்கிறோம் அது என்ன 49P என்று பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. உண்மையிலேயே 49P என்கிற சட்டப்பிரிவு உள்ளதா? இல்லை படத்தின் சுவாரஸ்யத்திற்காக இப்படி ஒரு சட்டப்பிரிவை கற்பனை செய்துள்ளார்களா? என்று ரசிகர்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.

அதாவது சர்கார் திரைப்படத்தில் நடிகர் விஜயின் ஓட்டை வேறு ஒருவர் கள்ள ஓட்டாக போட்டுச் சென்று இருப்பார். அப்போது தான் விஜய் 49P எனும் சட்டப் பிரிவின் படி தனக்கு வாக்களிக்க உரிமை உள்ளதாக வாக்குச்சாவடி மையத்தில் உள்ள அதிகாரிகளிடம் வாதம் செய்வார். இதற்கு முன்பெல்லாம் நமது ஓட்டை வேறு யாராவது போட்டுவிட்டு சென்றால் நாம் வேறு வழியில்லாமல் வீட்டுக்கு திரும்பிவிடுவது வழக்கம். நடிகர் சிவாஜியின் ஓட்டை கூட வேறு ஒருவர் போட்டுச் சென்று இருந்தார்.

ஆனால் அப்போது கூட 49P சட்டப்பிரிவு குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில் சர்கார் படத்தில் விஜய் கூறும் 49P குறித்து மூத்த வழக்கறிஞர்களிடம் பேசினோம். அப்போது 49P என்கிற சட்டப்பிரிவு உள்ளது என்று அவர்கள் கூறினர். மேலும் அந்த சட்டத்தை குறித்தும் மூத்த வழக்கறிஞர்கள் விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.

49P என்கிற சட்டப்பிரிவு கூறுவது இது தான்:- இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் 18 வயதை கடந்துவிட்டால் வாக்களிக்கும் உரிமையை பெற்றுவிடுவார்கள். இதற்காக அவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்குமாறு விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டு பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டால் இந்தியாவில் அவர்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும் எந்த தேர்தலிலும் வாக்களிக்கும் உரிமை உண்டு.

அந்த வகையில் எந்த ஒருவரும் தனது ஓட்டை மட்டுமே போட வேண்டும். யாராவது கள்ள ஓட்டாக நம் ஓட்டை போட்டுச் சென்றுவிட்டார் அதற்கு 49P தீர்வாகிறது. இந்த வகையில் நமது ஓட்டை ஒருவர் போட்டுச் சென்றுவிட்டார், உண்மையில் அந்த ஓட்டுக்கு உரியவர் நாம் தான் என்கிற ஆதாரத்தை நாம் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். இதனை அவர் ஏற்கும் பட்சத்தில் நமது ஓட்டை வேறு யாரும் போட்டுச் சென்று இருந்தாலும் கூட நாமும் ஓட்டுப்போட முடியும்.

ஆனால் நாம் வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டோம். மாறாக நமக்கு வாக்குச் சீட்டு தருவார்கள். அதில் நாம் நமக்கு பிடித்த நபரின் பெயருக்கு அருகே பெருக்கல் குறி (X) இட்டு அதனை மடித்து தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துவிட்டு செல்ல வேண்டும். இந்த வாக்கை தபால் ஓட்டுடன் சேர்த்து வாக்கு எண்ணிக்கையின் போது எண்ணுவார்கள். 

அதாவது கள்ள நோட்டு போடப்பட்டால் நமது வாக்குரிமை பறிக்கப்பட்டுவிட்டது என்று நாம் கவலைப்பட வேண்டியது இல்லை. மாறாக 49P பிரிவை பயன்படுத்தி நாம் நம் ஓட்டை போட்டுவிட்டு வரலாம் என்பதே இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது.