புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப 4 விமானங்களை தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்த நடிகர் அமிதாப் பச்சனை அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று அச்சத்தால் தவித்த உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊர் அனுப்பி வைக்க, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நான்கு சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்தார்.

மஹாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் பல்வேறு புலம்பெயர் தொழிலாளர்கள் சிக்கி இருப்பதும், ஊர் திரும்ப அவர்களுக்கு உதவி தேவைப்படுவதும் நடிகர் அமிதாப் பச்சனின் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து அவர் கெட்டுக் கொண்டதற்கிணங்க, அவரது ஏபி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் யாதவ் சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்தார். மும்பையில் இருந்து அலகாபாத், கோரக்பூர் மற்றும் வாரணாசி ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை காலை தலா 180 பயணிகளுடன் இந்த விமானங்கள் புறப்பட்டன.

புலம்பெயர் தொழிலாளர்களுடன் மேலும் இரண்டு விமானங்கள் இன்று புறப்பட உள்ளன. சமீபத்தில் மஹிம் மற்றும் ஹாஜி அலி தர்க்காக்களுடன் இணைந்து 10 பேருந்துகளில் 300 புலம்பெயர் தொழிலாளர்களை லக்னோ, அலகாபாத், படோஹி மற்றும் உத்தரபிரதேசத்தின் பிற இடங்களுக்கு அமிதாப் அனுப்பி வைத்தார். அமிதாப்பின் உதவியால் முதல் முறையாக விமானத்தில் பறந்து வீடு சேர்ந்த தொழிலாளர்கள் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். சமீபத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சோனுசூட் விமானத்தை வாடகைக்கு பிடித்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்திருந்தார்.