டைட்டிலில் சொன்னது போல நீங்க அவ்வளவு அலட்சியமாக நினைக்கவோ, திட்டவோ வேண்டாம், இது கொஞ்சம் சீரியஸ் மேட்டர் தான்...  செல்போன்களை அதிகம் பயன்படுத்துவதால் பறவை இனங்களுக்கு பாதிப்பு வருகிறது என பறவையியல் வல்லுனர் ஆன அக்ஷய்குமார், செல்போன் கம்பெனிகளுக்கு குறைவான அனுமதி கொடுக்க வேண்டும் என்றும், அலைவரிசையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கிறார். 

ஆனால், அரசாங்கம் அதை ஏற்க மறுக்கிறது. நீதிமன்றத்தை நாடி அங்கும் தோற்றுப் போகிறார். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார். அதன்பின் ஆவியாக (?) வந்து பறவைகளின் சக்தியுடன் பறவை மனிதனாக மாறி  செல்போன்களை காணாமல் போகச் செய்கிறார். தன்னை எதிர்த்தவர்களையும் கொலை செய்கிறார். அது பற்றி கண்டுபிடிக்க அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி ரோபோ விஞ்ஞானி வசீகரன் (ரஜினிகாந்த்), அவர் உருவாக்கி பிரித்து மியூசியத்தில் வைக்கப்பட்ட சிட்டி ரோபோவின் 2.0 வெர்ஷனை உருவாக்குகிறார். சிட்டி, பறவை மனிதனை அழித்ததா இல்லையா மாயாஜாலம் கலந்த காட்சிகளுடன் மேஜிக் காட்டுகிறார் ஷங்கர்.

இந்த படத்தை யார் வேணும்னாலும் நடித்திருக்கலாம், நடிகர்களை விட காட்சிகள்தான் நம்மை கபளீகரம் செய்கின்றன. 3Dயில் படத்தைப் பார்ப்பதால் கண்கள் பிரம்மாண்டமாக விரிந்து நம்மை அந்த விஷுவல் மேஜிக்கை ரசிக்க வைக்கின்றன.இந்த படத்தை 3D யில் பாத்தால்தான் திருடி  இப்படி ஒரு படம் எடுக்கலாம் தப்பே இல்லை என சொல்லத் தோன்றும்.

விஞ்ஞானி வசீகரன், சிட்டி 2.0 வெர்ஷன் என ரஜினிகாந்த். வழக்கம் போலவே அவருடைய ஸ்டைலான நடிப்பில் நம்மை கொள்ளை கொள்கிறார். அவர்களை விட கிளைமாக்சில் கொஞ்ச நேரமே வரும் 'கம்ப்ரெஸ்டு வெர்ஷன் 3.0' தனி ஸ்டைலில் அசத்துகிறது. 

படத்தின் வில்லன் என அக்ஷய்குமாரைச் சொல்ல முடியாது. வெட்டிப் பேச்சுக்கெல்லாம் அடிக்கடி செல்போனைப் பயன்படுத்தும் நாம்தான் வில்லன்கள். செல்போன் பயன்பாட்டைக் குறையுங்கள், பறவைகளையும் வாழவிடுங்கள் என்ற நல்லெண்ணத்துடன் போராடுகிறார் அக்ஷய்குமார். பிளாஷ்பேக்கில் வயதான பறவையியல் வல்லுனராக உருக வைக்கிறார். பின்னர், பறவை மனிதனாக (பேயாக) மாறி அதகளம் செய்கிறார்.