சுமார் பதினோரு வருடங்களுக்கு முன்பு எனது 40 வயதிலேயே சினிமாவிலிருந்து ரிடையர்டாக விரும்பினேன்’ என்று ஒரு அதிர்ச்சி தகவலை ‘2.0’ ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் வெளியிட்டார். 

தற்போது சத்யம் சினிமாஸ் தியேட்டரில் நடந்து வரும் ‘2.0’ ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் மேடையேறிய ஏ.ஆர். ரகுமானிடம் இசையமைப்பாளர் அனிருத் ‘உங்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோ யார். அது ஒரே ஒருவரின் பெயராகத்தான் இருக்கவேண்டும் என்று கேள்வி கேட்டார்.

 

அதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான், ‘இப்போதல்ல இந்தக் கேள்விக்கு பதிலை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டேன். எனக்குப் பிடித்த நடிகர் எப்போதும் ரஜினிதான். ஏனெனில் அவரைப் பார்க்கும்போது யாருக்கும் புத்துணர்ச்சி தொற்றிக்கொள்ளும். மிகவும் இளம் வயதிலேயே சினிமாவுக்குள் பிரவேசித்துவிட்டதால் எனது 40 வது வயதில் சினிமாவிலிருந்து ரிடையர்டாகிவிடவேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருந்துகொண்டே இருந்தது.  

ஒருமுறை ஷங்கர் சாரின் எந்திரன் படப்பிடிப்புக்குப் போயிருந்தபோது கேமராவுக்கு முன்னாலும் பின்னாலும் ரஜினி எவ்வளவு ஸ்பிரிட்டோடு இருக்கிறார் என்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அந்த நாளே அவரை எனது மானசீக முன்னோடியாக எடுத்துக்கொண்டு ரிடையர்டு ஆகும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன்’ என்றார் ரகுமான்.