சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்,  'தர்பார்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது.

இந்த திரைப்படம், 2020 ஆம் ஆண்டு,பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில், நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகிபாபு, நிவேதா தாமஸ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படம் முடிந்த கையோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 168 வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தை தல அஜித்தை வைத்து, நான்கு படங்களை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா இயக்குகிறார். இசையமைப்பாளர் டி.இமான் இசை அமைக்க உள்ள இந்த படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

மேலும் இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகை குஷ்பு மற்றும் மீனாவிடம் பட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை மீனாவை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகை மீனா, கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில், ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின் 'எஜமான்',  'வீரா',  'முத்து',  போன்ற படங்களில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்துள்ளார். குறிப்பாக இவர் ரஜினிகாந்துடன் நடித்த அனைத்து படங்களும் ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து கடந்த 2008 ஆம் ஆண்டு, நடிகர் பசுபதிக்கு ஜோடியாக ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்த 'குசேலன்' படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது 11 வருடங்களுக்கு பின் 'தலைவர் 168 வது' படத்தில் அவருக்கு ஜோடி போட உள்ளதாக, நெருங்கிய வட்டாரத்தில் உள்ளார்கள் கூறுகின்றனர். மேலும் இது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.