சமீபத்தில் தமிழ் ரசிக மகா ஜனங்கள் கொண்டாடிய 96 படத்தின் நீக்கப்பட்ட சுமார் 5 நிமிட காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் தன் காதலி த்ரிஷாவுக்கு அவருக்கு பிடித்த பாடகியான எஸ்.ஜானகியை விஜய் சேதுபதி சந்திக்க வைக்கிற காட்சி அது. உண்மையிலே அருமையான காட்சிதான் இது. ஆனால் எஸ்.ஜானகி என்ற மாபெரும் இசை மேதையை இவர்கள் அவமதித்ததை இப்போது வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார்கள்.

எஸ்.ஜானகி நடிகை அல்ல. அதனால் அவர் படத்தில் நடிக்க உடனடியாக சம்மதம் தெரிவித்திருக்க மாட்டார். இயக்குனர்தான் படத்தின் கதையை சொல்லி இம்ப்ரஸ் பண்ணி நடிக்க சம்மதம் வாங்கியிருப்பார். 5 நிமிட காட்சிக்கு எப்படியும் இரண்டு நாள் படப்பிடிப்பு நடந்திருக்கும். அந்த இசை மேதையை பல டேக்குகள் வாங்கி நடிக்க வைத்திருப்பார்கள். அவரும் நம்பிக்கையுடன் நடித்திருப்பார்.

படம் முழுக்க அவரின் பெருமையை பேசிவிட்டு. அவர் நடித்த காட்சியை நீக்கி இருப்பது அவரை அவமானப்படுத்துவது ஆகாதா?. சரி அப்படியே விட்டுத் தொலைத்திருக்கலாம். இப்போது அதை வெளியிட்டு அவரை இன்னும் அவமானப்படுத்தியிருக்கிறார்கள்.

படத்தின் நீளம் கருதி. காட்சியை குறைப்பது ஒரு படைப்பாளியின் உரிமை என்பதை மறுக்கவில்லை. ஆனால் எஸ்.ஜானகி போன்ற மேதைகளை படைப்புக்குள் கொண்டு வரும்போது சரியான திட்டமிடல் வேண்டாமா? கவனம் வேண்டாமா?

96 இயக்குனர் பிரேம்குமார் எஸ்.ஜானகியின் வீட்டுக்குச் சென்று அவர் காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்கட்டும். அதுதான் அந்த இசை மேதைக்குச் செய்யும் மரியாதை.

முகநூலில்... மீரான்