இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 400 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 260 காலிப் பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் 31.05.2025.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) தற்போது உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். இந்த வேலைவாய்ப்புகளுக்கு யார் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள், என்ன கல்வித் தகுதி இருக்க வேண்டும் போன்ற விவரங்களை இப்போது பார்ப்போம்.

காலிப் பணியிடங்கள்:

மொத்தம் 400 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாநில வாரியாகப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 260 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஒடிசாவில் 10, மகாராஷ்டிராவில் 45, குஜராத்தில் 30, மேற்கு வங்கத்தில் 34 மற்றும் பஞ்சாபில் 21 பணியிடங்களும் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி:

கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், அந்தந்த மாநிலத்தின் உள்ளூர் மொழித் திறனும் அவசியம். உதாரணமாக, தமிழகத்தில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ் மொழியில் புலமை பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பைப் பொறுத்தவரை, விண்ணப்பதாரர்கள் 20 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு.

சம்பளம்:

தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகளுக்கு மாதச் சம்பளமாக ₹48,480 முதல் ₹85,920 வரை வழங்கப்படும்.

தேர்வு முறை:

தேர்வு முறையில், முதலில் ஆன்லைன் தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உள்ளூர் மொழித் திறன் தேர்வு நடத்தப்படும். இருப்பினும், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் உள்ளூர் மொழியை ஒரு பாடமாகப் படித்தவர்கள், அதற்கான மதிப்பெண் சான்றிதழ்களைச் சமர்ப்பித்தால், இந்த மொழித் திறன் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

இந்த பணியிடங்களுக்கான தேர்வு முறை ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும். தமிழகத்தில் ஆன்லைன் தேர்வு நடைபெறும் இடங்களாக சென்னை, மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை, திருச்சிராப்பள்ளி, வேலூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், கரூர், கடலூர், திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் 31.05.2025 ஆகும். அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்க விரும்புவோர் https://www.iob.in/upload/CEDocuments/IOB-Recruitment-of-Local-Bank-Officer-2025-26.pdf என்ற இணைய முகவரியைப் பார்வையிடலாம்.