IISER IAT 2026 IISER 2026 சேர்க்கைக்கான IAT தேர்வு ஜூன் 7-ல் நடைபெறுகிறது. ஏப்ரல் 13-க்குள் விண்ணப்பிக்கவும். தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை இதோ! b
இந்தியாவில் மருத்துவத்திற்கு நீட் (NEET), பொறியியலுக்கு ஜே.இ.இ (JEE) இருப்பது போலவே, அடிப்படை அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்க விரும்பும் மாணவர்களுக்கான முதன்மையான நுழைவுத் தேர்வு IAT (IISER Aptitude Test). 2026-27 கல்வி ஆண்டிற்கான இந்தத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.
பெர்ஹாம்பூர், போபால், கொல்கத்தா, மொஹாலி, புனே, திருவனந்தபுரம் மற்றும் திருப்பதி ஆகிய ஏழு இடங்களில் அமைந்துள்ள ஐசர் (IISER) கல்வி நிறுவனங்களில் இளநிலை அறிவியல் படிப்புகளில் சேர இந்த ஒரு தேர்வு மட்டுமே வழியாகும். குறிப்பாக, இந்த ஆண்டு முதல் ஜே.இ.இ மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறாது என்பதால், ஐஏடி தேர்வு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
முக்கிய தேதிகள்: எப்போது விண்ணப்பிக்கலாம்?
ஐஏடி 2026 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் விண்டோ மார்ச் 5, 2026 அன்று திறக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள மாணவர்கள் ஏப்ரல் 13, 2026 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், ஏப்ரல் 16 முதல் 18 வரை மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்விற்கான ஹால் டிக்கெட்டுகள் மே 24, 2026 அன்று வெளியாகும். நாடு முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் ஜூன் 7, 2026 அன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நுழைவுத் தேர்வு நடைபெறும்.
கல்வித் தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, மாணவர்கள் 2024, 2025 அல்லது 2026 ஆகிய ஆண்டுகளில் 12-ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் (அறிவியல் பிரிவு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களும், SC/ST/PwD பிரிவினர் 55% மதிப்பெண்களும் பெற்றிருப்பது அவசியம்.
மாணவர்கள் உயிரியல், வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியல் ஆகிய நான்கு பாடங்களில் குறைந்தது மூன்றையாவது படித்திருக்க வேண்டும். சில குறிப்பிட்ட படிப்புகளுக்கு (உதாரணமாக போபால் ஐசரில் பி.டெக் பொருளாதார அறிவியல்) கணிதம் கட்டாயப் பாடமாகும்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமுள்ள மாணவர்கள் iiseradmission.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். முதலில் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு பெற்று, பின் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியவுடன் விண்ணப்ப செயல்முறை நிறைவடையும்.
மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின், உதவி மைய எண்ணான +91 7205457461-ஐ தொடர்பு கொள்ளலாம் அல்லது askjac2026@iiserbpr.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம்.


