CBSE 2026 சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பிற்கு ஆன்-ஸ்கிரீன் மதிப்பீடு! விரைவான முடிவுகள் மற்றும் பிழையற்ற திருத்தம் குறித்து சன்யம் பரத்வாஜ் விளக்கம்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் விடைத்தாள் திருத்தும் முறையில் மிகப்பெரிய மாற்றத்தை அமல்படுத்த உள்ளது. இந்த ஆண்டு முதல் 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் அனைத்தும் 'ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்படும் என்று சிபிஎஸ்இ தேர்வுத் துறை கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இருப்பினும், 10-ம் வகுப்பு விடைத்தாள்கள் வழக்கம் போல் நேரடி முறையிலேயே திருத்தப்படும் எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
வேகமான மற்றும் வெளிப்படையான மதிப்பீடு
"செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது," என்று சன்யம் பரத்வாஜ் கூறியுள்ளார். இந்த புதிய முறையின் மூலம் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு கணினி திரையில் ஆசிரியர்களால் திருத்தப்படும். இதனால் மதிப்பீட்டுப் பணிகளில் ஒருங்கிணைப்பு மேம்படுவதோடு, மனிதத் தவறுகள் மற்றும் கூட்டல் பிழைகள் (Totalling Errors) முற்றிலும் தவிர்க்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்
இந்த டிஜிட்டல் மதிப்பீட்டு முறை சுற்றுச்சூழலுக்கு உகந்தது மட்டுமல்லாமல், ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளிலிருந்தே விடைத்தாள்களைத் திருத்த வழிவகுக்கும். "ஆசிரியர்கள் தங்கள் வழக்கமான பள்ளிப் பணிகளைத் தொடர்ந்துகொண்டே மதிப்பீட்டுப் பணியிலும் ஈடுபட முடியும்," என்று பரத்வாஜ் சுட்டிக்காட்டினார். மேலும், உலகம் முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் இந்த மதிப்பீட்டுப் பணியில் பங்குகொள்ள முடியும்.
மறுமதிப்பீட்டிற்கான தேவை குறையும்
புதிய முறையின் துல்லியத்தன்மை காரணமாக, தேர்வு முடிவுகளுக்குப் பிந்தைய மதிப்பெண் சரிபார்ப்பு (Verification of Marks) இனி தேவைப்படாது என்று வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் மறுமதிப்பீட்டிற்காக செலவிடப்படும் மனிதவளம் மற்றும் நேரம் பெருமளவு மிச்சமாகும். பள்ளிகள் இந்தத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், தேவையான கணினி வசதிகள் மற்றும் இணைய இணைப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


