யமஹா நிறுவனத்தின்MT-15 மோட்டார்சைக்கிள் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டு இருக்கிறது.
யமஹா நிறுவனம் தனது MT-15 மோட்டார்சைக்கிள் விற்பனையை இந்தியாவில் நிறுத்தி இருக்கிறது. இதனை நாடு முழுவதிலும் செயல்பட்டு வரும் பல்வேறு டீலர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இதுபற்றி யமஹா தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், MT-15 மாடல் காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் புதிய நிறங்களில் மட்டுமே அப்டேட் செய்யப்பட்டு வந்தது. இவைதவிர மோட்டார்சைக்கிளின் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது. சமீபத்தில் இந்த மாடலின் விலையும் இந்தியாவில் உயர்த்தப்பட்டது.
விலை உயர்வு மட்டுமின்றி புதிய R15 V4 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது போன்ற காரணங்களால் யமஹா MT-15 சத்தமின்றி குறைந்த எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், MT-15 விற்பனை நிறுத்தப்பட்டு விரைவில் மேம்பட்ட யமஹா MT-15 அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய மேம்பட்ட மாடல் ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் புதிய யமஹா MT-15 மாடலில் USD ஃபோர்க், டூயல் சேனல் ABS மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
யமஹா MT-15 மாடலில் 155சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் மற்றும் VVA தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 18.23 பி.ஹெச்.பி. பவர், 13.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் எல்.இ.டி. ஹெட்லைட், எல்.இ.டி. டெயில் லைட், நெகடிவ் எல்.சி.டி. கன்சோல், சைடு ஸ்டாண்டு என்ஜின் கட்-ஆஃப், சிங்கில் சேனல் ABS, அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.
