ரூ.500 நோட்டு வாபஸ்? ஆர்.பி.ஐ. ஆளுநர் விளக்கம்!
ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெற ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதா என்பது பற்றி சக்திகாந்த தாஸ் விளக்கம் அளித்துள்ளார்
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறவோ அல்லது ரூ.1,000 நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தவோ ரிசர்வ் வங்கியிடம் எந்த திட்டமும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார். இதுகுறித்த வதந்திகளுக்கு இடமளிக்க வேண்டாம் என அவர் பொதுமக்கள் கேட்டுக் கொண்டார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவின் கூட்டம் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலமையில் இன்று நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவ்ர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ரெப்போ வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாகவே தொடரும் என்றார்.
மேலும், ரூ.500 நோட்டை திரும்பப் பெறும் எண்ணமோ, ரூ.1,000 நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டமோ இல்லை எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். கடந்த மாதம் அதிக மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ஆர்பிஐ அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக, புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகளில் சுமார் 50 சதவீதம் வங்கிகளுக்கு வந்துள்ளதாகவும் சக்திகாந்த தாஸ் தகவல் தெரிவித்தார்.
ரெப்போ விகிதத்தில் மாற்றவில்லை; வீட்டுக் கடனுக்கான வட்டி மாறுகிறதா? என்ன சொன்னார் சக்திகாந்த தாஸ்!!
கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி, ரூ.3.62 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாக தெரிவித்த சக்திகாந்த தாஸ், ஆர்பிஐயின் அறிவிப்பையடுத்து ரூ.1.80 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எதிர்பார்த்தபடியே, 85 சதவீதம் ரூ.2000 நோட்டுகள் வங்கிகளுக்கு டெபாசிட்டாகவே வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ரூ.2000 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய அல்லது மாற்ற செப்டம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது. எனவே, பொதுமக்கள் பதற்றப்பட தேவையில்லை. அதேசமயம், கடைசி நேரத்தில் சென்று அவசராவசரமாக மாற்றுவதை தவிர்க்க வேண்டும் எனவும் பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.