ரெப்போ விகிதத்தில் மாற்றவில்லை; வீட்டுக் கடனுக்கான வட்டி மாறுகிறதா? என்ன சொன்னார் சக்திகாந்த தாஸ்!!
ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
நிதியாண்டு 2024க்கு பின்னர் நாட்டின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 6.5% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாததால் வீட்டுக் கடன் மீதான வட்டியிலும் எந்த மாற்றமும் இருக்காது.
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கடந்த மூன்று நாட்களாக நடந்த நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு இருந்தார். இந்த நிலையில் இன்று ஜூன் 8 ஆம் தேதி நிதி முடிவை அறிவித்தார். மூன்று நாட்கள் கலந்தாலோசித்த பின்னர் கொள்கை ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாக வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது வங்கிகளுக்கு, நிதி நிறுவனங்களுக்கு இந்த வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் ரிசர்வ் வங்கி கொண்டு வரவில்லை. இதனால், வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் இல்லை.
தமிழகத்திற்கு வருகிறதா ஜெர்மனி முதலீடு; டெல்லி பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?
மூன்று நாட்கள் நடந்த நிதிக் கொள்கைக் குழு கூட்டத்திற்கு பின்னர் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த சக்திகாந்த தாஸ், ''உள்நாட்டு தேவையும் ஏறுமுகத்தில் இருக்கிறது. கிராமப்புறங்களில் வளர்ச்சி அதிகரித்து காணப்படுகிறது. நிதியாண்டு 2024ல் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முதலாம் காலாண்டில் இதன் வளர்ச்சி 8% ஆகவும், இரண்டாம் காலாண்டில் இதன் வளர்ச்சி 6.5% ஆகவும், மூன்றாம் காலாண்டில் இதன் வளர்ச்சி 6% ஆகவும், நான்காம் காலாண்டில் 5.7% ஆகவும் கணிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட பணவீக்கம் 4%திற்கும் அதிகமாக இருக்கிறது. இது தொடர்ந்து நீடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அந்நிய செலவாணி இருப்பு திருப்திகரமாக இருக்கிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தில் 8% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சில்லறை பணவீக்கம் 5.1 சதவீதமாக இருக்கும். இது முன்பு 5.2 சதவீதம் என்று கணிக்கப்பட்டு இருந்தது. நிதிக் கொள்கைகள் எதிர்பார்த்த பலனை அளித்து வருகிறது.
நடப்புக் கணக்குப் பற்றாக்குறை நான்காம் காலாண்டில் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சிறப்பாக நிர்வகிக்கக்கூடியதாக உள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இந்திய ரூபாயின் மதிப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் ஸ்திரமாக இருக்கிறது.
மே மூன்றாவது வாரத்தில் இருந்து, புழக்கத்தில் உள்ள ரூபாயின் சரிவு மற்றும் அரசாங்க செலவினங்களின் அதிகரிப்பு காரணமாக பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் சந்தை நடவடிக்கைகள் மற்றும் வங்கிகளில் ரூ.2,000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் ஆகியவை காரணமாக அமைந்துள்ளது.