எந்தக் கடையில் எந்தப் பொருள் வாங்கினாலும் சரி, ஷோரூமில் பைக், கார் வாங்கினாலும் சரி, ஆட்டோ, வாடகை காரில் பயணித்தாலும் சரி ஒரே வார்த்தை விலைவாசி கூடிப் போச்சுசார். 

எந்தக் கடையில் எந்தப் பொருள் வாங்கினாலும் சரி, ஷோரூமில் பைக், கார் வாங்கினாலும் சரி, ஆட்டோ, வாடகை காரில் பயணித்தாலும் சரி ஒரே வார்த்தை விலைவாசி கூடிப் போச்சுசார். 

ஏன் விலைவாசி கூடுகிறது, காரணம் என்ன என்று சிந்தித்து இருக்கிறோமோ. அனைத்துப் பொருட்களின் விலைவாசி உயர்வுக்கும்,அதனால் ஏற்படும் பண வீக்கம் உயர்வுக்கும் முக்கியக் காரணாமாக இருப்பது பெட்ரோல், டீசல் விலை உயர்வும், அதனுடைய மூலப்பொருளான கச்சா எண்ணெய் விலை உயர்வுதான்.

சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்துக்கு ஏற்பத்தான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தொடர்ந்து அதிகரி்த்தால், அது இந்தியாவி்ல் உள்ள கடைக்கோடி கிராமத்தில் உள்ள சாமானியரின் சட்டைப் பாக்கெட் வரை சூடுவைக்கப்படுகிறது.

நாட்டில் பணவீக்கத்தை உயரவைத்து, அனைத்துப் பொருட்கள் விலையையும் பன்மடங்கு உயரவைப்பது பெட்ரோல், டீசல் விலைதான் என்பதில் மறுப்பதற்கில்லை. 

கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதியிலிருந்து அமெரிக்காவின் பிரண்ட் கச்சா எண்ணெய் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவு பேரல் 92 டாலராக அதிகரித்துவிட்டது. இது கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதிக்குப்பின் 36 சதவீத விலை அதிகரிப்பாகும்.

சர்வதேச சந்தையில் என்ன நடக்கிறது?

பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு உலக நாடுகளின் நிலவும் சூழலும், கொரோனா பெருந்தொற்றும் முக்கியக் காரணமாகும். இவை இரண்டும் கச்சா எண்ணெய் உற்பத்தி அதாவது சப்ளை(அளிப்பு) மற்றும் தேவையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அமெரிக்காவின் மிகப்பெரிய ரேட்டிங் மற்றும் சந்தை நிறுவனமான ஏஏஏ –வின் செய்தித்தொடர்பாளர் ஆன்ட்ரூ கிராஸ் கூறுகையில் “ கொரோனா பெருந்தொற்று அனைத்தின் விலையையும் உயர்த்திவிட்டது. எந்த விலையையும் கணிப்பது குறைந்துவிட்டது, கணிக்கமுடியாதநிலைக்கு சென்றுவிட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பெருந்தொற்று மட்டுமல்லாமல் வேறு பல காரணங்களும் உண்டு. இப்போதுள்ள நிலையில் எரிபொருள் விலை குறைவதற்கான வாய்ப்பு சாத்தியங்கள் குறைவுதான்.

குறிப்பாக உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்து வருவதால் ஏற்படும் பதற்றம், உலகளவில் எரிபொருள் உற்பத்தி, சப்ளையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் லிபியா முதல் ஈக்வெடார் வரை, நைஜிரியாவரை கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துவிட்டன. இதனால் தேவைக்கும் குறைவாக இருப்பதால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் விவகாரத்தில் ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் எடுத்துவரும் நிலைப்பாடு, ஈரான் அணுஆயுதப் பேச்சுவார்த்தை போன்றவை கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் ” எனத் தெரிவித்தார்

ரஷியாவில் பதற்றம்?

ரஷியாவில் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுதான் ஐரோப்பிய நாடுகளுக்கும், உலகின் பல நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் ஏற்பட்டுள்ள பதற்றம் கச்சா எண்ணெய் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 உக்ரைன் எல்லையில் ஒரு லட்சம் வீரர்களை ரஷியா நிறுத்தியுள்ளது. உக்ரைனை நேட்டோ படையில் சேர்க்கக்கூடாது என்று அமெரிக்காவிடம் ரஷியா வலியுறுத்தி வருகிறது. ஆனால், அமெரிக்கா மறுக்கிறது. இதனால், உக்ரைனுக்குள் ஊடுருவ ரஷிய படைகள் தயாராக இருக்கின்றன. இதனால், உக்ரைனிலிருந்து அமெரிக்க அதிகாரிகள் உடனடியாக வெளியேற அமெரிக்க உத்தரவிட்டுள்ளது.

உக்ரைனுக்குள் ரஷியா எந்த வழியில் ஊடுருவினாலும் ரஷியா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்கும். அவ்வாறு பொருளாதாரத் தடைகள் விதித்தால், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலை உலகளவில் அதிகரி்க்கும், இப்போதிருக்கும்விலையைவிட இன்னும் அதிகரிக்கும்.

ஐரோப்பிய நாடுகளுக்கு தேவையான 30 முதல் 40 சதவீத கச்சா எண்ணெய் மற்றும்இயற்கை எரிவாயுவை ரஷியா வழங்கி வருகிறது. உலகளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 5 சதவீதத்தை ரஷியா வைத்துள்ளது.ரஷியா கச்சா எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதியை நிறுத்தினால் அது உலகளவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும்.

விலை குறைய வாய்ப்புள்ளதா

ரஷியாவில் பதற்றம் அதிகரித்து கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கும் பட்சத்தில் உலக நாடுகள் வேறுவழியின்றி விலை வாசி உயர்வைத்தடுக்கவும், சப்ளையில் சிக்கலின்றி கொண்டு செல்லவும் தங்களின் இருப்பை வெளியே கொண்டுவரும். அப்போது ஓரளவு விலையைக் கட்டுப்படுத்த முடியும். இருப்பு கச்சா எண்ணெய் மூலம் விலை வாசி உயர்வைக் கட்டுப்படுத்தலாம், குறைக்க முடியாது. 

எப்போது முடிவுக்கு வரும்

ரஷியா பிரச்சினை எப்போது முடிவுக்கு வரும், எப்போது கச்சா எண்ணெய் விலை குறையும் என்பது உறுதியாக யாருக்கும் தெரியாது. அதுவரை உலக நாடுகள் தங்களின் இருப்பு கச்சா எண்ணெயை எடுத்து செலவிடலாம். உக்ரைன் விவகாரத்தில் ரஷியா என்ன செய்யப்போகிறது, ரஷியாவின் நடவடிக்கைக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அளிக்கும் பதிலடியைப் பொறுத்து கச்சா எண்ணெய் விலை நிர்ணயமாகும்.

இந்தியாவில்பெட்ரோல் டீசல் விலை உயருமா?


இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து 92 நாட்களாக எந்தவிதமான மாற்றமும் இன்றி இருக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் 2 வார சராசரி அடிப்படையில்தான் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. அந்த அடிப்படையில்பார்த்தால் கடந்த 2 வாரங்களாக கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்தில் இருக்கிறது.

குறிப்பாக 5 மாநிலத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால் அது தேர்தல் வெற்றியை கடுமையாகப் பாதிக்கும், எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து அரசியல் செய்யலாம் என்பதாலும் விலை உயர்வை அமல்படுத்தாமல் அரசு மவுனம் காத்து வருகிறது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். ஆதலால், தேர்தல் முடிந்தபின் பெட்ரோல் டீசல் விலையில் குறிப்பிடத்தகுந்த அளவு உயர்வு இருப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் நம்புகிறார்கள்.