Gautam Adani: கௌதம் அதானியின் அசுர வளர்ச்சியும் அதள பாதாள வீழ்ச்சியும்
உயர்கல்வியை பாதியில் கைவிட்டு தொழிலில் இறங்கிய கெளதம் சாந்திலால் அதானி, இப்போது இந்தியாவில் மட்டுமின்றி, ஆசியாவிலேயே முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
இப்போது 60 வயதாகும் கெளதம் சாந்திலால் அதானி 1962ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் சாந்திலால் – சாந்தா பென் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். துணி வியாபாரம் செய்துகொண்டிருந்த நடுத்தர ஜெயின் குடும்பத்தில் பிறந்த அதானிக்கு 7 பேர் உடன்பிறப்புகள். அகமதாபாத்தில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு குஜராத் பல்கலைக்கழகத்தில் பி.காம். படிப்பில் சேர்ந்தார். ஆனால், அப்போதே வியாபாரத்தைத் தொடங்கி படிப்பை பாதியில் நிறுத்தினார்.
1978ஆம் ஆண்டு மும்பைக்குச் சென்று மகேந்திரா பிரதர்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தார். 1981ஆம் ஆண்டு தன் சகோதரரின் அழைப்பை ஏற்று பிளாஸ்டிக் ஆலை நிர்வாகத்தைக் கவனிக்க ஆரம்பித்தார். 1988ஆம் ஆண்டு அதானி என்டர்பிரைசஸ் என்ற சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். 1994ஆம் ஆண்டு அதானி என்டர்பிரைஸ் பங்குச்சந்தை பட்டியலில் இடம்பிடித்தது. அப்போது அந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 150 ரூபாயாக இருந்தது.
1995ஆம் ஆண்டு குஜராத் முந்த்ரா துறைமுக நிர்வாக ஒப்பந்தம் இவரது நிறுவனத்துக்குக் கிடைத்தது. இதற்குப் பிறகு இன்னும் பல துறைமுகங்களின் நிர்வாக ஒப்பந்தம் அவருக்குக் கிடைத்தது. இதனால் மெல்ல அத்துறையில் அதானி பெயர் நிலைபெற்றது.
1996ஆம் ஆண்டு அதானி பவர் நிறுவனத்தை நிறுவி அனல்மின் உற்பத்தியை களமிறங்கினார். அது இந்தியாவிலேயே மிகப்பெரிய தனியார் அனல்மின் நிலையமாக மாறியது.
2000ஆம் ஆண்டு சமையல் எண்ணெய் விற்பனையையும் அடுத்த ஆண்டு சமையல் எரிவாயு விநியோகத்தையும் தொடங்கினார்.
Adani FPO: அதானி என்டர்பிரைசஸ் FPO திடீர் வாபஸ்! முதலீட்டாளர்களிடம் பணத்தை திரும்ப அளிக்க முடிவு
2015ஆம் ஆண்டு சோலார் மின்சாரம் எனப்படும் சூரிய மின்சக்தி உற்பத்திக்காக அதானி க்ரீன் என்ற நிறுவனத்தை ஏற்படுத்தினார். இந்த நிறுவனம் 2020ஆம் ஆண்டு இந்திய சூரிய ஆற்றல் கழகத்தின் 6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை வென்றது. இதுவே உலகின் மிகப்பெரிய சோலார் மின்சார உற்பத்தி ஒப்பந்தம் ஆகும். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதியில் 2,500 ஏக்கர் பரப்பளவில் அதானி க்ரீன் நிறுவனத்தின் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் உள்ளது.
கௌதம் அதானி இப்போதைய பிரதமரும் முன்னாள் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். மோடி 2001ஆம் ஆண்டு குஜராத் முதல்வராகப் பதவியேற்றது முதல் அதானியின் தொழில் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையேயான நெருக்கத்துக்கு அடையாளமாக பல நிகழ்ச்சிகளைச் சுட்டிக்காட்ட முடியும்.
2014ஆண்டு பொதுத்தேர்தலின்போது மோடி பிரசாரத்துக்கு பயன்படுத்திய ஹெலிகாப்டர் அதானி குழுமத்துக்குச் சொந்தமான கர்னாவதி நிறுவனத்தைச் சார்ந்தது. மோடி பிரதமரானதும் ஆஸ்திரேலியாவில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டில் மோடியுன் அதானியும் கலந்துகொண்டார். பொதுத்துறை நிறுவனங்களான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), எல்ஐசி போன்றவை அதானி குழுமத்தில் மிகப்பெரிய முதலீடுகளைச் செய்துள்ளன.
இவ்வாறு அதானிக்கும் மோடிக்கும் இடையே இருக்கும் நெருக்கம் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்துள்ளது. அந்த அளவுக்கு மோடியின் அரசியல் முன்னேற்றத்துக்கு இணையாகவே அதானியின் தொழில் விரிவாக்கமும் நிகழ்ந்திருக்கிறது.
Adani Share: அதானி குழுமப் பத்திரங்கள் ‘ஜீரோவா’ மதிப்பில்லையா? கிரெடிட் சூசி வாங்குவதை நிறுத்தியது
இந்தச் சூழ்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கை அதானி குழுமம் மீது பல குற்றச்சாட்டுகளை எழுப்பி 88 கேள்விகளைப் பட்டியலிட்டுள்ளது. கடந்த பத்தாண்டு காலத்தில் இந்திய பங்குச்சந்தையில் மோசடி செய்து, அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை செயற்கையாக உயர்த்தப்பட்டிருக்கிறது என்பது உள்ளிட்ட பல குற்றசாட்டுகள் அந்த ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கைக்கு பதிலாக அதானி குழுமம் நானூறுக்கும் மேற்பட்ட பக்கங்களில் பதில் அறிக்கை வெளியிட்டது. ஹிண்டன்பர்க் அறிக்கை ‘இந்தியா மீதான திட்டமிட்ட தாக்குதல்’ எனவும் ‘அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்கள்’ எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் பதில் அறிக்கையில் தாங்கள் எழுப்பிய 88 கேள்விகளில் ஒன்றுக்குக்கூட பதில் இல்லை என்று கூறிய ஹிண்டன்பர்க் நிறுவனம், தங்கள் ஆய்வு மற்றும் ஆதாரத்தின் அடிப்படையிலான தங்கள் குற்றச்சாட்டுகளில் உறுதியாக இருப்பதாகவும் திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறது.
இந்த ஹிண்டன்பர்க் அறிக்கையின் எதிரொலியாக அதானி நிறுவனம் மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. பங்குச்சந்தைகளில் அதானி குழும பங்குகளின் விலை தினமும் பெருமளவு சரிவையே அடைந்து வருகின்றன. அதானியின் சொந்த மதிப்பும் கடுமையாக அடிவாங்கி இருக்கிறது. அதானிக்கும் அவரது நிறுவனங்களுக்கும் இதுவரை ஏற்பட்டிராத பெரிய நெருக்கடி இப்போது உண்டாகியுள்ளது. இது அதானி குழுமத்தில் முதலீடு செய்திருப்பவர்களையும் மிக மோசமாகப் பாதிக்கும் அபாயம் உள்ளது.
Adani vs Ambani: உலக பணக்காரர் பட்டியலில் அதோ கதியான அதானி! மீண்டும் முதல் இடத்தில் அம்பானி!