இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன? முழு பட்ஜெட்டில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன? முழு பட்ஜெட்டில் இருந்து அது எவ்வாறு வேறுபடுகிறது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்
நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31ஆம் தேதி கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால், முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் பொதுத் தேர்தலுக்குப் பின்னர், புதிய அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும். அந்த சமயத்தில், வரவிருக்கும் நிதியாண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கப்படும். அது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும். பெரும்பாலும் தேர்தல் நடைபெறும் ஆண்டுகளில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன? முழு பட்ஜெட்டில் இருந்து அது எவ்வாறு வேறுபடுகிறது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன?
மக்களவை தேர்தல் நடக்கும் ஆண்டில், மத்திய பட்ஜெட்டுக்கு பதிலாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இடைக்கால பட்ஜெட் என்பது ஒரு வகையான தற்காலிக பட்ஜெட் ஆகும். அரசாங்கம் அதன் செலவுகளை சில மாதங்களுக்கு சமாளிக்க இது உதவுகிறது. தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி விடாத வண்ணம், இடைக்கால பட்ஜெட்டில் கொள்கை முடிவுகள் எடுக்கப்படாது.
ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 நிதியாண்டுக்கு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஆனால், முழு நிதியாண்டுக்கு பதிலாக, நடப்பு நிதியாண்டின் மீதமுள்ள மாதங்களின் வரவு - செலவுகளை சமாளிக்க இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. சம்பளம், ஓய்வூதியம் மற்றும் நலத்திட்டங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகள் தடையின்றி செயல்படுவதை உறுதி செய்வதில் இது கவனம் செலுத்துகிறது.
நாட்டில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் போது, அரசாங்கம் அதன் செலவினங்களை நிர்வகிப்பதற்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அரசாங்கம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவில்லை என்றால், புதிய நிதியாண்டுக்கான செலவுகளுக்கு அதனிடம் நிதி இருக்காது. எனவேதான் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட் 2024: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விதிமுறைகள்!
முழு மத்திய பட்ஜெட்
மத்திய பட்ஜெட் என்பது, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரியில் சமர்ப்பிக்கப்படுகிறது, இது ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை வரவிருக்கும் நிதியாண்டிற்கான முழு நிதிநிலை அறிக்கையாக செயல்படுகிறது. வரிகள் மற்றும் பிற கருவிகள் மூலம் அரசாங்கத்தின் வருவாய் ஆதாரங்களின் விரிவான பட்டியலை பட்ஜெட் ஆவணம் வழங்குகிறது. உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளுக்கு முழு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும். மத்திய பட்ஜெட்டில் பல கொள்கைகள் மற்றும் விதிகளில் அரசாங்கம் மாற்றங்களைச் செய்யலாம். இதன் போது, விரிவான விவாதம், ஆய்வு, திருத்தங்கள் உள்ளிட்டவைகள் நடைபெறும்.
Vote On Account
Vote on Account என்பது ஒரு வருடத்தின் பட்ஜெட்டை வரவு செலவு திட்டங்களில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அடுத்த வருடத்தின் முதல் இரண்டு மாதத்திற்கு நீட்டிப்பதாகும். சில சமயங்களில் Vote on Account ஆறு மாதங்கள் வரை கூட நீட்டிக்கப்படும். பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டானது, மார்ச் மாதம் 30ஆம் தேதிக்குள் நிதி மசோதா, ஒதுக்கீட்டு மசோதா ஆகியவை மூலமாக மக்களவையில் நிறைவேற்றபட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற வேண்டும். சில சமயங்களில், பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல்-மே மாதங்கள் வரை நீடிக்கும். அதுபோன்ற சமயங்களில் Vote on Account சமர்ப்பிக்கப்பட்டு மக்களவையின் ஒப்புதல் பெறப்படும். அப்போதுதான் ஏப்ரல் 1ஆம் தேதியன்று கஜானாவில் இருந்து எடுத்து அரசு செலவு செய்ய முடியும்.
அதேபோல், ஒரு நிதி ஆண்டின் முதல் ஆறு மாததிற்குள்ளேயே ஒரு மக்களவையின் காலம் முடிவடைகிறது என்றால், Vote on Account மூலமாக அடுத்த ஆறு மாதத்திற்கு வரவு-செலவு செய்யும் அதிகாரத்தை அரசாங்கம் பெரும். நாட்டின் அரசு இயந்திரம் தொடர்ச்சியாக இயங்குவதை Vote on Account உறுதி செய்கிறது. இது ஒரு தற்காலிக நடவடிக்கையாகும். சம்பளம் மற்றும் நடப்பு நலத்திட்டங்கள் போன்ற உடனடிச் செலவுகளைக் கவனித்துக்கொள்வதற்காக, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, இந்திய ஒருங்கிணைந்த நிதியிலிருந்து நிதியைப் பயன்படுத்துவதற்கான அதிகாரத்தை புதிய அரசாங்கத்திற்கு வழங்குகிறது.
முந்தைய பட்ஜெட் அல்லது இடைக்கால பட்ஜெட்டை அடிப்படையாகக் கொண்டு Vote on Account நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை, இந்திய ஒருங்கிணைந்த நிதியிலிருந்து நிதியை இதன் மூலம் பயன்படுத்தலாம்.