தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாமக்கல் பிரச்சாரத்தில் திமுகவின் நிறைவேறாத வாக்குறுதிகளை அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பினார். கிட்னி திருட்டு விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, ஆளும் கட்சியினரின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும், முக்கியப் பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டி அதிரடியாகப் பேசினார்.

"முட்டை நகரம் தந்த உணர்ச்சி!"

நாமக்கல்லைப் பற்றிப் பேசிய விஜய், "நாமக்கல் மாவட்டத்தின் முட்டை உலகம் முழுவதும் பேமஸ். அதனால்தான் இதை முட்டை நகரம் (Egg City) என்றுகூடக் கூப்பிடுவார்கள். நாமக்கல், சத்தான உணவான முட்டையை மட்டும் கொடுக்கவில்லை, உணர்ச்சி ஊட்டியதும் நாமக்கல் மாவட்டம்தான். 'தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்று பாடிய நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்கள் பிறந்தது நாமக்கல் மாவட்டம். இட ஒதுக்கீடு பெற்றுத் தந்த முன்னாள் முதல்வர் சுப்பராயன் அவர்கள் பிறந்ததும் நாமக்கல்தான்" என்று பெருமிதத்துடன் கூறினார்.

நிறைவேறாத வாக்குறுதிகள்

தொடர்ந்து, ஆளும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளைச் சுட்டிக்காட்டி விஜய் கேள்வி எழுப்பினார். "முன்னாள் முதல்வர் சுப்பராயன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார்களே (திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி 456) செய்தார்களா?

நாமக்கல் மாவட்டத்தில் ஒன்றியங்கள் தோறும் தானிய சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் (திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி 50) என்று சொன்னார்களே, செய்தார்களா?

கொப்பரைத் தேங்காயைத் தமிழக அரசே கொள்முதல் செய்யும், அதிலிருந்து தேங்காய் எண்ணெய் எடுத்து ரேஷனில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் (திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி 66) என்று கூறினார்களே, நிறைவேற்றப்பட்டதா?" என்று அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பினார்.

மேலும், அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்களுக்கும் மட்டுமின்றி ஓய்வூதியதாரர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கப்படும் (திமுக தேர்தல் அறிக்கை 152) என்ற வாக்குறுதியும் என்ன ஆனது என்று வினவினார்.

அமெரிக்காவுக்கு ஒற்றையடி பாதை!

திமுகவைப் போல பொய்யான வாக்குறுதிகள் எல்லாம் கொடுக்க மாட்டோம் என்ற விஜய், "புதுசா ஏதாவது சொல்லுங்கன்னு சொல்றாங்க… புதுசா என்ன சொல்றது? செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி தொடங்கப்படும். காற்றிலே கல்வீடு கட்டப்படும், அமெரிக்காவுக்கு ஒற்றையடிப்பாதை போடப்படும், வீட்டுக்குள்ளேயே ஏரோபிளேன் விடப்படும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் மாதிரி நான் அடித்துவிட வேண்டுமா?" என்று சாடினார்.

பாசிச பாஜக அரசுடன் எப்போதும் ஒத்துப்போக மாட்டோம் என்றும் திமுகவைப் போல மறைமுக உறவில் இருக்க மாட்டோம் என்றும் விஜய் கூறினார். அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்திருக்கும் அதிமுகவையும் விமர்சித்த விஜய், “இந்த பாஜக அரசு தமிழ்நாட்டுக்காக என்ன செய்துவிட்டார்கள்? நீட்டை ஒழித்துவிட்டார்களா? கல்வி நிதியை முழுவதும் கொடுத்துவிட்டார்களா? பின் எதற்காக பாஜகவுடன் கூட்டணி?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், திமுகவுக்கு ஓட்டுப் போட்டால் பாஜகவுக்கு ஓட்டுப் போட்ட மாதிரிதான் எனவும் திட்டவட்டமாகக் கூறினார்.

கிட்னி திருட்டு குற்றச்சாட்டு

முட்டை சேமிப்புக் கிடங்குகள் மற்றும் பாக்டீரியா, வைரல் பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என்ற நாமக்கல் மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கையை இதுவரை இருந்த ஆட்சியாளர்களும் இப்போது ஆட்சியில் இருப்பவர்களும் யோசிக்கவே இல்லை என்றும் விஜய் சாடினார்.

திமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான மருத்துவமனையில் நடைபெற்ற கிட்னி திருட்டு குறித்தும் விஜய் கடுமையாக விமர்சித்தார். "கிட்னி திருட்டில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். தவெக ஆட்சிக்கு வந்ததும், இந்தக் கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார்.