மூலப்பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் தமிழக ஜவுளித்தொழில் நெருக்கடியை எதிர்கொண்டாலும், சர்வதேச காரணங்களால் இறக்குமதியாளர்கள் திருப்பூர் நோக்கி வருவதால் தமிழக ஜவுளித்தொழில் மீண்டும் உயிர்ப்படைந்து வருகிறது.
இந்தியா ஜவுளித்துறையில் முன்னோடியாக இருப்பதற்கு தமிழகம் முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. தமிழகத்தில் திருப்பூர், கோவை, ஈரோட்டில் உள்ள நூற்பாலைகள், விசை மற்றும் கைத்தறிகள் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கானோருக்கு உடுத்த உடையை கொடுத்து வருகின்றன. இந்தியாவில் 42 லட்சம் கைத்தறிகளும், 33 லட்சம் விசைத்தறிகளும் இயங்கி வருகின்றன.
பருத்தி உற்பத்தியில் இந்தியா டாப்
இந்தியாவில் 153 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி பயிர் செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் பருத்து பயிர் செய்யப்படும் பருத்தியுடன் இதனை ஒப்பிட்டால் 38 சதவீதம் ஆகும். இந்த நிலையில், மூலப்பொருட்கள் விலை உயர்வு, செயற்கை இழை இறக்குமதிக்கு தரக்கட்டுப்பாடு விதிப்பு போன்ற காரணங்களால் தமிழக ஜவுளித்தொழில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜவுளித்துறையும் சில சவால்களும்
செயற்கை இழை ஜவுளித்தொழில் சிறந்த வளர்ச்சிக்கு வாய்ப்பு உள்ள நிலையில், இந்தியாவில் செயற்கை இழை இறக்குமதி செய்ய அமல்படுத்தப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு விதிமுறைகளால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சாயமேற்றுதல் பணி விதிமுறைகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் குஜராத் போன்ற மாநிலங்களில் இத்தகைய விதிமுறைகள் அதிகம் இல்லை என்பதாலும் செலவு குறைவு போன்ற காரணங்கலாலும் தமிழகத்தில் இருந்து பல கோடி மீட்டர் துணி குஜராத் கொண்டு செல்லப்பட்டு திரும்பவும் தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டியுள்ளது. இதனால் போக்குவரத்து செலவு அதிகரித்து உற்பத்தி செலவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனவும் ஜவுளித்துறையில் தெரிவித்துள்ளனர்.
இந்திய ஆர்டரை தட்டிப்பறித்த போட்டி நாடுகள்
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக உள்ள விலையேற்றம் உள்ள காரணங்களால் நமது ஏற்றுமதி ஆர்டரை, வியட்நாம், பங்களாதேஷ் ஆகிய நாட்கள் பறித்துக்கொண்டன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் துணிகளை விட குறைந்த விலைக்கு அந்த இரு நாடுகளும் கொடுத்ததால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த இறக்குமதியாளர்கள் அங்கு ஆர்டர் கொடுக்க தொடங்கினர். இதனால் கொரோனா பரவலுக்கு பிறகு இந்தியாவில் ஜவுளித்தொழில் பாதிக்கப்பட்டது. அதுவும் தமிழகத்தில் உள்ள நூற்பாலைகள் பல மாதங்கள் இயங்காமல் நிற்கும் அளவிற்கு ஆர்டர் கிடைக்காமல் போனது.
காற்றில் பறந்த கோரிக்கைகள்
ஜவுளித்தொழில் பாதிப்பு குறித்து மத்திய மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாலும் இரு அரசுகளும் தங்களுக்கு ஆதரவான உத்தரவை பிறப்பிக்கவில்லை எனவும், கோரிக்கைகளை நிறைவேற்ற தவறிவிட்டதாகவும் ஜவுளி உற்பத்தி துறையினர் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், தானாகவே இந்தியாவிற்கு ஆர்டர்கள் திரும்ப தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நிலைமை மாறியதால் மகிழ்ச்சி
கடந்த மூன்று நிதியாண்டுகளில் வெளிநாட்டு ஆர்டர்கள் குறைந்து இருந்ததால் ஜவுளித்தொழில்துறையினர் பெரும் சவாலை சந்தித்து வந்ததாக கூறும் நூற்பாலை உரிமையாளர்கள், தற்போது அந்த நிலமை மாறியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். வியட்நாமில் தொழிலாளருக்கு வழங்கப்படும் சம்பளம் அதிகரித்துள்ளதால் ஜவுளி உற்பத்தி செலவு உயர்ந்துள்ளதாக நினைக்கும் இறக்குமதியாளர்கள், மீண்டும் இந்தியாவை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். அதேபோல் பங்களாதேஷ் நாட்டில் நிலவும் அரசியல் தேக்கநிலை அமெரிக்க ஐரோப்பிய ஜவுளி இறக்குமதியாளர்களை சோர்வடைய செய்துள்ளதாகவும், இதனால் அவர்களும் இந்தியாவை அடுத்த விருப்பமாக தேர்வு செய்துள்ளதாகவும் இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மீண்டும் களைகட்டும் திருப்பூர்
சர்வதேச காரணங்களால் ஆசிய ஐரோப்பிய இறக்குமதியாளர்கள் இந்தியாவை நோக்கி வரும் நிலையில், அதில் குறிப்பாக தமிழகத்திற்கே அதிக ஆர்டர்கள் வருவதாக கூறப்படுகிறது. இந்திய ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு வரும் ஆர்டரில் 35 சதவீதத்திற்கு மேல் திருப்பூர் கைப்பற்றி வருவதாகவும் அத்துறை வல்லுணர்கள் கூறியுள்ளனர். ஜவுளித்துறை தேக்க நிலையில் இருந்ததால் சொந்த ஊர் சென்று இருந்த தென்தமிழக தொழிலாளர்கள் மீண்டும் திருப்பூர் நோக்கி வரத்தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நிற்காமல் ஓடப்போகும் தறிகள்
ஆர்டர் மட்டுல்லாமல் தொழிலாளர்களும் குவியத்தொடங்கியுள்ளதால் திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தொழில்துறை மீண்டும் வேகமெடுக்கும் சூழல் நிலவி வருகிறது.திருப்பூரில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மொத்தம் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.இவர்களில் 60%–65% வரை பெண்கள் உள்ளனர். துணிக்கடை, துணி வெட்டும் வேலை, தையல், பிரிண்டிங், பேக்கிங் போன்ற பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூரில் ஆண்டுதோறும் சுமார் 55 மில்லியன் கிலோ நூல் மற்றும் 20 மில்லியன் மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. திருப்பூரில் மட்டும் 10,000க்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. தற்போது புதிய ஆர்டர் கிடைக்க தொடங்கியுள்ளதால் ஜாப் ஒர்க் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் மேலும் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்றும் திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.2021–22 ஆண்டில் திருப்பூர் ஜவுளி ஏற்றுமதி மதிப்பு ரூ. 33,525 கோடி ரூபாயாகவும், 2023–24ல் ஏற்றுமதி மதிப்பு ரூ.40,000 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.இந்தியாவின் பருத்தி ஆடைகள் ஏற்றுமதியில் 54 சதவீதம் திருப்பூர் பூர்த்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.