Tata Altroz DCA: டாடா அல்ட்ரோஸ் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் (DCA) டிரான்ஸ்மிஷன் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. மேலும் இந்த மாடலுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய அல்ட்ரோஸ் ஆட்டோமேடிக் வேரியண்ட் முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும். முன்பதிவு மட்டும் துவங்கி விட்ட நிலையில், வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது.
இந்திய சந்தையில் அல்ட்ரோஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலின் ஆட்டோமேடிக் வேரியண்ட் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த வேரியண்ட் மூலம் டாடா மோட்டார்ஸ் மேலும் அதிக வாடிக்கையாளர்களை கவர முடிவு செய்துள்ளது. புதிய அல்ட்ரோஸ் ஆட்டோமேடிக் வேரியண்ட் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.

"எங்கள் வெற்றி கதையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், எங்களின் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும் வகையிலும் உலகத் தரம் வாய்ந்த ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை அல்ட்ரோஸ் மாடலில் அறிமுகம் செய்கிறோம். புதிய அல்ட்ரோஸ் DCA ஆட்டோமேடிக் பிரிவில் 'கோல்டு ஸ்டாண்டர்டு' ஆக இருக்கும்," என டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன பிரிவு விற்பனை, விளம்பரம் மற்றும் கஸ்டமர் கேர் பிரிவு துணை தலைவர் ராஜன் அம்பா தெரிவித்தார்.
டாடா அல்ட்ரோஸ் DCA மாடல் ஒபேரா புளூ எனும் புதிய நிறத்தில் அறிமுகமாகிறது. இதுதவிர அல்ட்ரோஸ் DCA மாடல் டவுன்டவுன் ரெட், ஆர்கேட் கிரே, அவென்யூ வைட் மற்றும் ஹார்பர் புளூ நிறங்களிலும் கிடைக்கிறது. இந்த டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் அல்ட்ரோஸ் டார்க் எடிஷனிலும் வழங்கப்படுகிறது.
டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் டாப் எண்ட் மாடல்களான XT, XZ மற்றும் XZ+ 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜினுடன் வழங்கப்படுகிறது. அல்ட்ரோஸ் மாடலில் பிரீமியம் அம்சங்களாக இருக்கும் லெதர் இருக்கைகள், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ரியர் ஏ.சி. வெண்ட்கள், குரூயிஸ் கண்ட்ரோல், ஆட்டோ ஹெட்லேம்ப் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன.
