sri lanka crisis: திவாலாகிறதா! வெளிநாட்டு கடனை திருப்பி கொடுக்க முடியாது: இலங்கை அரசு கைவிரிப்பு
sri lanka crisis: மிகமோசமான பொருளாதார சூழல்காரணமாக, வெளிநாட்டு அரசுகளிடம், வெளிநாடு வங்கிகளிலும் வாங்கியுள்ள 5ஆயிரத்து 100 கோடி டாலர் கடன்களையும் திருப்பி அடைக்க முடியாத நிலையில் இருக்கிறோம் என்று இலங்கை அரசு இன்று அதிகாரபூர்வமாகத் தெரிவித்து கைவிரித்தது.
மிகமோசமான பொருளாதார சூழல்காரணமாக, வெளிநாட்டு அரசுகளிடம், வெளிநாடு வங்கிகளிலும் வாங்கியுள்ள 5ஆயிரத்து 100 கோடி டாலர் கடன்களையும் திருப்பி அடைக்க முடியாத நிலையில் இருக்கிறோம் என்று இலங்கை அரசு இன்று அதிகாரபூர்வமாகத் தெரிவித்து கைவிரித்தது.
கடன் கொடுத்த நாடுகள், வங்கிகள் வட்டித் தொகைக்கு தங்கள் நாட்டு ரூபாயில் வேண்டுமானால் வாங்கிக்கொள்ளலாம் என்றும் இலங்கை நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.
மோசமான பொருளாதாரச் சூழல்
கடந்த 1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்தற்குப் பின் சந்திக்கும் மிக மோசமான பொருளாதாரச் சிக்கல்களை தற்போது சந்தித்து வருகிறது. அந்நியச் செலவாணி கையிருப்பு குறைவால் வெளிநாடுகளில் இருந்து உணவுப்பொருட்கள், மருந்துகள், பெட்ரோல், டீசல், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியவில்லை.
இதனால் இலங்கையில் பொருட்கள் விலை விண்ணை முட்டு்ம் அளவுக்கு உயர்ந்துவிட்டது. மக்கள் விலை வாசி உயர்வை தாங்கமுடியாமல் தங்களின் சேமிப்புகளையும், சொத்துக்களையும் விற்று செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மக்கள் போராட்டம்
தங்களின் வாழ்வாதாரம், எதிர்காலம் வீணாகிப்போனதால் ஆத்திரமடைந்த மக்கள் சாலைகளிலும் அதிபர் மாளிகை முன்பும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மக்களை அடக்க ராணுவமும், போலீஸாரும் ஈடுபட்டுள்ளனர். ஆனால், நாள்தோறும் போராட்டங்கள் நடந்து வருகின்றன
இலங்கையில் அந்நியச் செலவாணி கையிருப்பு 190 கோடி டாலர்களாகக் குறைந்துவிட்டதால் இ்ந்தியாவிடம் 100 கோடி டாலர் உதவி கோரியது. இது தவிர 100 கோடிக்கு பெட்ரோல், டீசல், உணவு தானியங்கள், மருந்துகள் ஆகியவற்றை வழங்குமாறு கோரியது. இதன்படி, இந்தியாவிலிருந்து டீசல் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து டீசல் சென்றபின்புதான் இலங்கையில் மின்சார உற்பத்தி நடந்து, 13 மணிநேர மின்வெட்டுக் குறைந்தது. இருப்பினும் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை.
வெளிநாட்டுக் கடன்
இலங்கை அரசுக்கு வெளிநாடுகளிலும், வெளிநாட்டு வங்கிகளிடமும் 5100 கோடி டாலர் கடன் இருக்கிறது. இந்த கடனுக்கான தொகையை வரும் ஜூலை மாதம் செலுத்த வேண்டிய நிலையில் இலங்கை அரசால் அதற்கான வாய்ப்பு முற்றிலும் இல்லை என்பது தெளிவானது.
இதைத்தொடர்ந்து சர்வதேச நிதியத்திடம் சென்றுஇலங்ைக அரசு உதவி கோரியது. வெளிநாட்டுக் கடனை அடைப்பதற்கான தொகையை வழங்குமாறு இலங்கை அரசு உதவி கோரியுள்ளது. ஆனால், அங்கிருந்து எந்தவிதமான தகவலும் இல்லை.
கடனை அடைக்க முடியாது
இந்த சூழலில் இலங்கை நிதிஅமைச்சகம்திடீரென ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் “ இலங்கை அரசுக்கு 5100 கோடி டாலர் வெளிநாட்டுக் கடன் இருக்கிறது. மிக மோசமான பொருளாதாரச் சூழல் காரணமாக இலங்கை அரசால் இந்தக் கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கிறோம். கடன் கொடுத்த நாடுகள் , வங்கிகள் தங்களுக்கான வட்டியை இலங்கையின் ரூபாயில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். நாங்கள் சர்வதேச நிதியத்திடம் நிதியுதவி கோரியிருக்கிறோம் அது காத்திருப்பில் இருக்கிறது
இலங்கை அரசின் நிதிநிலைமை இன்னும் மோசமான நிலைக்கு செல்வதைத் தடுக்கும் நோக்கில்தான் இந்த அவசரகார நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. கடனை செலுத்துவது சாத்தியமற்றது சவாலானது எனத் தெரிந்துதான் இந்த முடிவுக்கு வந்துள்ளோம். இது தற்காலிக முடிவுதான் எங்களிடம் போதியஅளவு டாலர் வரத்து வந்தபின் கடனை செலுத்துவோம். அதுவரை கடனைச் செலுத்த முடியாது. இந்த நிலையே தொடரும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
ரேட்டிங் குறைப்பு
இலங்கை பொருளாதாரச் சூழலைப் பார்த்த சர்வதேச கடன்தர ரேட்டிங் அமைப்புகள் கடந்த ஆண்டே இலங்கையின் ரேட்டிங்கை மோசமாகக் குறைத்தன. இதனால் புதிய முதலீடு ஏதும் இலங்கைக்குள் வருவதும் தடைபட்டது. புதிதாக எந்த நாடும், வங்கியும் கடன் தருவதில் தயக்கம் காட்டின. இதனால் வேறுவழியினறி இந்தியா, சீனாவிடம் இலங்கை அரசு கையேந்துகிறது