ஸ்கோடா நிறுவனம் தனது ஸ்லேவியா மாடல் வெளியீட்டு தேதி மற்றும் இதர விவரங்களை அறிவித்து இருக்கிறது. 

ஸ்கோடா நிறுவனத்தின் ஸ்லேவியா மாடல் இந்தியாவில் பிப்பரவரி 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது அந்நிறுவனத்தின் ரேபிட் மிட்-சைஸ் செடான் மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படுகிறது. முதலில் பிப்ரவரி 28 ஆம் தேதி அறிமுக நிகழ்வில் ஸ்லேவியா 1 லிட்டர் TSI வேரியண்ட் விலை மட்டும் அறிவிக்கப்பட இருக்கிறது. பின் மார்ச் 3 ஆம் தேதி 1.5 லிட்டர் TSI வேரியண்ட் விலை அறிவிக்கப்பட இருக்கிறது.

விலை அறிவிப்புக்கு பின் புதிய ஸ்லேவியா மாடலுக்கான டெஸ்ட் ரைடுங்கள் துவங்க இருக்கின்றன. மிட்சைன் செடான் பிரிவில் அதிக அம்சங்கள் நிறைந்த மாடலாக ஸ்லேவியா இருக்க வேண்டும் என்பதில் ஸ்கோடா மிக கவனமாக செயல்பட்டு வருகிறது. இதில் 10 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் வெண்டிலேட் செய்யப்பட்ட சீட்கள் வழங்கப்படுகின்றன. 

பாதுகாப்பிற்கு புதிய ஸ்லேவியா மாடலில் ஆறு ஏர்பேக், ESC, எலெக்டிரானிக் டிஃபரென்ஷியல் சிஸ்டம் (EDS), ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இந்திய சந்தையில் புதிய ஸ்கோடா ஸ்லேவியா மாடல் ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் என மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

புதிய ஸ்லேவியா மாடலில் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இவை முறையே 115 ஹெச்.பி. திறன், 175 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 150 ஹெச்.பி. திறன், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இதே என்ஜின் ஸ்கோடா குஷக் எஸ்.யு.வி. மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதும் புதிய ஸ்கோடா ஸ்லேவியா மாடல் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சுசுகி சியாஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். புதிய ஸ்கோடா ஸ்லேவியா விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 16 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.