share market today : அமெரிக்க பெடரல் வங்கி அடுத்த மாதம் வட்டி வீதத்தை கடுமையாக உயர்த்தப் போவதாக வெளியான அறிவிப்பையடுத்து, மும்பை மற்றம் தேசியப் பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன.
அமெரிக்க பெடரல் வங்கி அடுத்த மாதம் வட்டி வீதத்தை கடுமையாக உயர்த்தப் போவதாக வெளியான அறிவிப்பையடுத்து, மும்பை மற்றம் தேசியப் பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன.

அமெரிக்க பெடரல் வங்கி
அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது.இதைக் கட்டுப்படுத்த அமெரிக் பெடரல் வங்கி ஏற்கெனவே 25 புள்ளிகள் வட்டிவீதத்தை உயர்த்தியிருக்கிறது. வரும் மே மாதத்தில் குறைந்தபட்சம் 50 புள்ளிகள் வட்டி உயர்த்தப்படும் என பெடரல் வங்கி தலைவர் ஜெரோம் நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த அறிவிப்பால் அமெரிக்காவின் நாஷ்டாக் 1.2% சரிந்தது, குறிப்பாக தொழில்நுட்பத்துறை பங்குகள் பெருத்த அடிவாங்கின. ஆசியாவிலும் ஜப்பானின் நிக்கி 2 சதவீதம், தைவானின் கோஸ்பி ஒரு சதவீதம் சரிந்தன. இதனால் இந்திய முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்வதில் தயக்கம் காட்டி லாபமீட்டும் நோக்கில் பங்குகளை விற்கத் தொடங்கியதால் சரிவு காணப்படுகிறது

பங்கேற்பு பத்திரங்கள்
அதுமட்டுமல்லாமல் பங்கேற்பு பத்திரங்கள் மூலம் கடந்த மார்ச் மாதம் ரூ.89ஆயிரம் கோடிக்கு மட்டுமே முதலீடு வந்துள்ளது மிகக்குறைவாகும். இதுவும் முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியதால், முதலீடு செய்ய தயங்கி வருகிறார்கள். கச்சா எண்ணெய் விலையும் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது, பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் 108.33 டாலராக அதிகரித்துள்ளது.
காலாண்டு முடிவுகள்
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஏராளமான நிறுவனங்கள் மார்ச் மாத காலாண்டு முடிவுகளை வெளியிடுகின்றன. இதனாலும் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் முதலீடு செய்யாமல் தவிர்த்து வருகிறார்கள். குறிப்பாக இந்துஸ்தான் ஜின்க், டாடா மெடாலிக்ஸ், ஆதித்யா பிர்லா மணி,பக்தி ஜெம்ஸ் அன்ட் ஜுவல்லரி,கெய்த்தான் கெமிக்கல்ஸ் பெர்டிலைசர்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாகின்றன
![]()
வீழ்ச்சி
இதனால் மும்பைப் பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 600 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 57,319 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 180 புள்ளிகள் சரிந்து, 17,211புள்ளிகளில் வர்த்தகம் நடந்து வருகிறது
30 முக்கிய நிறுவனங்களைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில் டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், ஹெச்சிஎல்டெக் ஆகிய 3 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே லாபத்தோடு நகர்கின்றன. மற்ற 27 பங்குகளும் சரிவில் உள்ளன.
நிப்டியில் ஹெச்சிஎல் டெக், ஓஎன்சிஜி, கோல் இந்தியா பங்குகள் லாபத்துடன் நகர்கின்றன, ஹின்டால்கோ, பஜாஜ் ஆட்டோ, மகிந்திரா அன்ட் மகிந்திரா, ஹெச்டிஎப்சி, மாருதிசுஸூகி நிறுவனப் பங்குகள் சரிவில் உள்ளன
நிப்டியில் அனைத்து துறைகளும் எதிர்மறையான நிலையில் வர்த்தகத்தை நடத்தி வருகின்றன. குறி்ப்பாக ஆட்டோமொபைல், நிதிச்சேவை, தனியார் வங்கிப் பங்குகள் ஒரு சதவீதத்தும் மேல் சரிந்துள்ளன
