share market today :அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டிவீத உயர்வு, சர்வதேச சந்தைகள் சரிவு ஆகியவற்றால் மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் சரிவில் முடிந்தன

அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டிவீத உயர்வு, சர்வதேச சந்தைகள் சரிவு ஆகியவற்றால் மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் சரிவில் முடிந்தன

பெடரல் வங்கி

அமெரிக்காவில் வரலாறு காணாத பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு பெடரல் வங்கி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் 25 புள்ளிகளை வட்டியில் உயர்த்திய நிலையில் நேற்றுமுன்தினம் 50 புள்ளிகளை உயர்த்தியது.

ஆனால், அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்த வட்டிவீத உயர்வு போதாது என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் வரும் மாதங்களில் வட்டிவீதம் மேலும் உயரும் என்ற அச்சம் நிலவியதால், அமெரிக்காவின் நாஷ்டாக் பங்குச்சந்தை சரிவுடன் முடிந்தது.

முதலீடு வெளியேற்றம்

பெடரல் வங்கி வட்டி வீதத்தை தொடர்ந்து உயர்த்தி வருவதால், இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை திரும்பப் பெற்றுவருவதால் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டு வருகிறது. செபி வெளியிட்ட தகவலின்படி வியாழக்கிழமை மட்டும் ரூ.2,074 கோடி மதிப்பிலான பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்பனை செய்து முதலீட்டை எடுத்துள்ளனர்.

அமெரிக்கப் பங்குச்சந்தை சரிவுடன் முடிந்ததன் எதிரொலி ஆசியப் பங்குச்சந்தையிலும் பிரதிபலிதித்து அங்கு வர்த்தகம் வீழ்ச்சியில் முடிந்தது. ஹாங்காங், ஷாங்காய், டோக்கியோ, கொரியா ஆகிய பங்குச்சந்தைகளும் இன்று சரிவில் முடிந்தன.

ரெப்போ ரேட் உயர்வு

இந்தியாவில் அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி திடீரென நேற்று முன்தினம் வட்டிவீதத்தை 40 புள்ளிகள் உயர்த்தியது. அன்றைய தினம் பங்குச்சந்தையில் மோசமான சரிவு இருந்தது. ஆனால், நேற்று வர்த்தகத்தொடக்கத்தில் ஏற்றமாக இருந்தபோதிலும் பிறபகலில் சரிவு ஏற்பட்டு, மாலை வீழ்ச்சியுடன் வர்த்தகம் முடிந்தது.ரிசர்வ் வங்கிஅடுத்துவரும் மாதங்களில் வட்டிவீதத்தை உயர்த்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இ்ந்தத் தகவலால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையற்று இருந்ததால் பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டினர்.

வீழ்ச்சி தொடர்ந்தது

இதனால் மும்பைப் பங்குச்சந்தையில் காலை சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து நிப்டி 261 புள்ளிகள் சரிந்தது. இன்றைய வர்த்தகம் முழுவதுமே பங்குச்சந்தையில் பெரும் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. 

மாலை வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 762 புள்ளிகள் சரிந்து, 54,940 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 242 புள்ளிகள் குறைந்து, 16,440 புள்ளிகளில் நிலைபெற்றது.

பஜாஜ் ட்வின்ஸுக்கு ்அடி

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 துறைகளில் 7 நிறுவனப் பங்குகள் மட்டுமே லாபத்தில் முடிந்தன. டெக்மகிந்திரா, பவர் கிரிட், ஐடிசி, என்டிபிசி, டாடா ஸ்டீல், சன் ஃபார்மா நிறுவனப் பங்குகள் லாபமடைந்தன. விப்ரோ, அல்ட்ராடெக் சிமெண்ட், இன்டஸ்இன்ட் வங்கி, டாடா ஸ்டீல், இன்போசிஸ், ஹெச்சிஎல், டைட்டன், ஹெச்டிஎப்சி பங்குகள் அதிகமான இழப்பைச்சந்தித்தன.

நிப்டியில் டிவிஸ் லேப்ஸ், பஜாஜ் பைனான்ஸ், பின்சர்வ், ஸ்ரீ சிமெண்ட்ஸ், யுபிஎல், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவில் முடிந்தன. குறிப்பாக பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் 4 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன. நிப்டியில் நுகர்வோர் உலோகம், ரியல்எஸ்டேட், தலா 3 சதவீதமும், தகவல் தொழில்நுட்பத்துறை 2 சதவீதமும் வீழ்ச்சி அடைந்தன. மின்சக்தி துறை 0.5 சதவீதம் வளர்ச்சி அடைந்தது