share market today : மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை வாரத்தின் முதல்நாளான இன்று சரிவுடன் தொடங்கி பெரும் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை முடித்தன.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை வாரத்தின் முதல்நாளான இன்று சரிவுடன் தொடங்கி பெரும் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை முடித்தன.

பெடரல் வங்கி

அமெரி்க்காவில் வரலாறு காணாத வகையில் பணவீக்கம் உயர்ந்திருப்பதால், அதைக் கட்டுப்படுத்த இந்த நிதியாண்டில் வட்டிவீதம் எதிர்பார்த்திராத அளவு உயர்த்தப்படும் என்று பெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் அறிவித்திருந்தார். அடுத்தமாதமே வட்டிவீதம் உயர்த்தப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. இந்த அறிவிப்பு, உலகளவில் பல்வேறு நாடுகளின் பங்குச்சந்தையிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

சீனாவில் கொரோனா

கடந்த வாரத்திலும் மும்பை, தேசியப் பங்குச்சந்தைசரிவுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்பு இருந்தது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது, இதனால் அங்கு முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் சீனாவில் கொரோனா பாதிப்பு குறையாபட்சத்தில், அங்கிருந்து வரும் பொருட்களின் சப்ளை பாதிக்கப்பட்டு பொருளாதார வளர்ச்சி பாதிக்கலாம் என்று முதலீட்டாளர்கள் அஞ்சினர்.

ஆசியப் பங்குச்சந்தையிலும் இன்று வர்த்தகம் சரிவுடனே இருந்தது. இந்த எதிரொலி இந்தியப் பங்குச்சந்தையிலும் இருந்தது. அதுமட்டுமல்லாமல்கடந்த நிதியாண்டில் இந்தியா 11900 கோடி டாலருக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த 2020-21நிதியாண்டு செலவைவிட இரு மடங்கு அதிகம் என்ற செய்தியும் முதலீட்டாளர்களை கலக்கமடையச் செய்தது.

பொருளாதார வளர்ச்சி

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7 சதவீதமாகக் குறையும் என்ற தனியார் நிறுவனத்தின் கணிப்பும் முதலீட்டாளர்களுக்கு பெரும் கவலையைஏற்படுத்தியது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அதிகரி்த்துவரும் பணவீக்கம், பொருட்களின் விலைவாசி உயர்வு, தேவை சுருங்கிவருவது போன்ற காரணிகளால் முதலீட்டாளர்கள் பிற்பகுதி வர்த்தகத்தில் முதலீடு செய்வதை தவிர்த்தனர். இதனால் பங்குச்சந்தையில் சரிவு வரிவடைந்தது.

சரிவு

இதனால் வர்த்தகம்தொடங்குவதற்கு முன்பே பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிந்தது. மாலை வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 617புள்ளிகள் சரிந்து, 56,579 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 218 புள்ளிகள் குறைந்து, 16,954 புள்ளிகளில் நிலைபெற்றது.

டாடா ஸ்டீல்

30 முக்கிய நிறுவனங்களைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில் 8 நிறுவனப் பங்குகள் மட்டுமே லாபமடைந்தன. ஹெச்டிஎப்சி,ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், நெஸ்ட்லே இந்தியா, மாருதி சுஸூகி, கோடக் வங்கி ஆகிய பங்குகள் லாபமடைந்தன. டாடா ஸ்டீல், பஜாஜ் பின்சர்வ், சன் பார்மா, விப்ரோ, டிசிஎஸ், மகிந்திரா அன்ட் மகிந்திரா, ஐடிசி, டைட்டன், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் அனைத்தும் சரிவில் முடிந்தன. 1008 பங்குகள் மதிப்பு உயர்ந்துள்ளது, 2435 பங்குகள்மதிப்பு சரிந்துள்ளது,136 பங்குகள் மதிப்பு மாறாநிலையில் உள்ளது.

உலோகத்துறை

நிப்டியில் கோல் இந்தியா, பிபிசிஎல், டாடா ஸ்டீல், ஹின்டால்கோ, எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனப்பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்தன. டாடா ஸ்டீல் பங்குகள் 4 சதவீதம் சரிந்தது. நிப்டியில் வங்கித்துறை பங்குகளைத் தவிர மற்ற பங்குகள் அனைத்தும் வீழ்ச்சி அடைந்தன. உலோகத்துறை, ரியல்எஸ்டேட் 4 சதவீதம் சரிந்தன, ஆட்டோமொபைல், சுகாதாரம், தகவல்தொழில்நுட்பம், மின்சக்தி, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய வங்குகள் தலா ஒரு சதவீதம் சரிந்தன