Asianet News TamilAsianet News Tamil

இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து ஏறுவது ஏன்? உலகின் முதல் ஏழு வங்கிகளில் ஒன்றாக இடம் பிடித்த ஹெச்டிஎப்சி!!

வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் பெரிய அளவில் முதலீடு செய்து பங்குச் சந்தையை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றதுடன், முதலீட்டாளர்களுக்கும் லாபத்தை அளித்து வருகின்றனர். 

Sensex up today along with HDFC bank turns as world's 7th largest bank
Author
First Published Jul 17, 2023, 3:39 PM IST

நடப்பு 2024 நிதியாண்டின் முதல் காலாண்டில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் முதலீடு அதிகரித்த காரணத்தினால், சென்செக்ஸ் 10 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் இதுவரை யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்செக்ஸ் 2.38 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் 66,000-க்கு மேல் முடிவடைந்த சென்செக்ஸ், இன்று 66,310.96 என்ற புதிய உச்சத்தை எட்டியது. நிஃப்டி 19,641.90 ஆக உயர்ந்தது. இது இன்றைய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 0.30 சதவீதம் உயர்வாகும்.

இந்தியாவில் சிறிய மற்றும் குறு நிறுவனங்கள் நன்றாக செயல்பட்டு லாபம் ஈட்டி வருகின்றன. மேலும், அமெரிக்காவின் நுகர்வோர் பணவீக்கம் எதிர்பார்த்ததை விட 3% ஆகக் குறைந்து வருவதால், அமெரிக்க மத்திய வங்கி இனி வட்டியை உயர்த்தாது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, அமெரிக்காவின் 10 ஆண்டு பத்திர ஈட்டுத் தொகை 5.1%-லிருந்து 4.7% ஆக குறைந்துள்ளது.  மேலும், டாலர் குறியீடு 103.57-லிருந்து 99.9 ஆக கிட்டத்தட்ட 4% சரிந்துள்ளது. இது இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இந்திய சந்தைக்குள் அதிக மூலதன முதலீடு வருவதை காண முடிகிறது என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

ஜூலை 31-க்கு பிறகு ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுமா? மத்திய வருவாய் செயலாளர் பதில்..

வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் ஜூலையில் இதுவரை ரூ.30,660 கோடியை பங்குகளில் முதலீடு செய்துள்ளனர். இது இந்தியப் பங்குச் சந்தைக்கு சாதகமாக அமைந்து பங்குகளின்  மதிப்பை உயர்த்தியுள்ளது. நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (என்எஸ்டிஎல்) தரவுகளின்படி, ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில், வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் ரூ. 1.07 லட்சம் கோடியை (12.5 பில்லியன் டாலர்) பங்குகளில் முதலீடு செய்துள்ளனர். ஜூலை மாதத்தில் சராசரியாக தினசரி ரூ. 2,000 கோடிக்கு அளவுக்கு இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 

ஸ்டெர்லிங் அண்டு வில்சன் ரெனியுபல் எனர்ஜி லிமிடெட், இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் லிமிடெட், ஷீலா போர்ம் லிமிடெட், ஜிண்டால் சா லிமிடெட், ஆர்பிஎல் பாங்க் லிமிடெட், லேட்டன்ட் வியூவ் அனலிடிக்ஸ் லிமிடெட், சன்டெக் ரியாலிட்டி, பஜாஜ் எலக்ட்ரானிக்ஸ், கொச்சின் ஷிப்யார்டு, ரத்னாமணி மெட்டல்ஸ் ஆகியவற்றின் பங்குகள் இன்று உயர்ந்து காணப்பட்டன. ஹெச்டிஎப்சி பங்கு மதிப்பு இன்று 1645.55 ஆக உயர்ந்து காணப்பட்டது.  

ஹெச்டிஎப்சி வங்கி மூலதனம் உயர்வு:
கடந்த ஜூன் 30, 2022-ல் முடிவடைந்த காலாண்டில் 9,196 கோடியாக இருந்த ஹெச்டிஎப்சியின் நிகர லாபம், நடப்பு ஏப்ரல்-ஜூன் காலாண்டு நிதியாண்டில் 11,951 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த தகவலை ஜூலை 17 அன்று வங்கி அறிவித்தது. 

இரண்டு வங்கிகளின் உரிமம் ரத்து: பரிவர்த்தனைக்கு ஆர்.பி.ஐ., தடை!

நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் ஜூன் 30, 2022-ல் முடிவடைந்த காலாண்டில் ரூ.19,481 கோடியிலிருந்து 21.1 சதவீதம் அதிகரித்து தற்போது ரூ.23,599 கோடியாக உயர்ந்துள்ளது. இவை எல்லாம் இன்று ஹெச்டிஎப்சி வங்கியின் பங்கு மதிப்பை உயர்த்த காரணமாக அமைந்துள்ளது. 

உலகின் முதல் பத்து வங்கிகளில் ஒன்றாக ஹெச்டிஎஃப்சி வங்கி இணைந்துள்ளது. இந்த வங்கியின் சந்தை மூலதனம் 100 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 151 பில்லியன் டாலர் அல்லது ரூ. 12.38 லட்சம் கோடி சந்தை மதிப்புகளுடன் ஹெச்டிஎப்சி வங்கி உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஏழாவது இடத்தில் உள்ளது. மோர்கன் ஸ்டான்லி, பாங்க் ஆப் சீனா வங்கிகளை விட மூலதனத்தில் பெரிய அளவில் ஹெச்டிஎப்சி வங்கி உருவெடுத்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios