எஸ்பிஐ வங்கியின் சிறப்பு வைப்புத் திட்ட வட்டி உயர்வு அறிவிப்பு; மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகை!!
நிலையான வைப்புத் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட கால கட்டங்களுக்கு எஸ்பிஐ அதிக வட்டி விகிதங்களை அறிவித்துள்ளது.
நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில், நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்கும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உத்சவ் டெபாசிட் என்ற பெயரில் புதிய வைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த நிலையான வைப்புத் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட கால கட்டங்களுக்கு மட்டும் அதிக வட்டி விகிதங்களை எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
இதுகுறித்து எஸ்பிஐ தனது டுவிட்டர் பதிவில், ''உங்களது வைப்புத்தொகை உங்களுக்கான கடின உழைப்பைச் செய்யட்டும். உங்களது வைப்பின் மீது அதிக வட்டி வழங்குவதற்கு 'உத்சவ்' டெபாசிட் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளது.
இந்த வைப்புத் திட்டத்தின் கீழ், 1000 நாட்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு ஆண்டுக்கு 6.10% வட்டி விகிதம் வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு வழக்கமான விகிதத்தை விட 0.50% கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்படும். இந்த திட்டம் 2022ல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தத் திட்டம் 75 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
direct tax: நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வருவாய் ஏப்ரல்-ஜூலையில் 40 % அதிகரிப்பு
எஸ்பிஐ ரூ. 2 கோடிக்கு கீழ் உள்ள நிலையான வைப்புகள் மீதான வட்டி விகிதங்களை சமீபத்தில் அதிகரித்தது. புதிய வட்டி விகிதங்களை ஆகஸ்ட் 13 ஆம் தேதி எஸ்பிஐ வங்கி அறிவித்து இருந்தது. இதன் அடிப்படையில், பல்வேறு தவணை காலங்களுக்கான வட்டி விகிதங்களை 0.15 சதவீதம் அதிகரித்து இருந்தது. 180 முதல் 210 நாட்களுக்கான நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை 4.40%ல் இருந்து 4.55% ஆக எஸ்பிஐ உயர்த்தியுள்ளது.
எஸ்பிஐ ஒரு வருடம் முதல் இரண்டு வருடங்களுக்கும் குறைவான முதிர்வு கொண்ட நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை 5.30%ல் இருந்து 5.45% ஆக உயர்த்தியது. 2 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 5.35%ல் இருந்து 5.50% ஆகவும், 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு குறைவாக உள்ள டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 5.45%ல் இருந்து 5.60% ஆகவும் அதிகரித்துள்ளது. எஸ்பிஐ 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை 5.50% லிருந்து 5.65% ஆக உயர்த்தியுள்ளது.
மூத்த குடிமக்களுக்காக, எஸ்பிஐ தனது இணையதளத்தில் SBI Wecare என்ற சிறப்பு டெபாசிட் சில்லறை வைப்புத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த டெபாசிட் திட்டம் நடப்பாண்டில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது