சஹாரா நிறுவனம் பொதுமக்களிடமிருந்து ரூ.25,000 கோடி சேகரித்தும், உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், ரூ.138 கோடி மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பணத்தைத் திரும்பப் பெறாததற்கான காரணங்கள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

"ரூ.25,000 கோடி எங்கே போனது?"- மர்மம் நிறைந்த சஹாரா வழக்கு!

இந்திய நிதி வரலாற்றில் இது மிகவும் விசித்திரமானதும், மர்மமூட்டும் நிதிக் கதைகளில் ஒன்றாகவே இருக்கிறது. ரூ.25,000 கோடி – இது ஒரு மாநில அரசின் முழு வருட பட்ஜெட்டுக்கு சமம். ஆனால் இந்த தொகை கடந்த 13 ஆண்டுகளாக முற்றிலும் பயன்படாமல் கிடக்கிறது. 2008–2009 காலகட்டத்தில், சஹாரா இந்தியா பரிவார் (Sahara India Pariwar) எனப்படும் மிகப்பெரிய நிறுவன குழுமம், நாட்டின் பல மாநிலங்களில் உள்ள பொதுமக்களிடமிருந்து OFCD (Optionally Fully Convertible Debentures) என்ற பொருளாதார கருவியின் மூலம் ₹25,000 கோடிக்கு மேல் பணத்தை சேகரித்தது.இந்த சேகரிப்பு பங்கு சந்தை வழியாக அல்ல, நேரடியாக கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள பொதுமக்களிடமிருந்தும் பெறப்பட்டது.இதில் பலர் கல்வியறிவு குறைந்தவர்கள், பட்டா/வட்டி குறித்து புரியாதவர்கள்.

SEBI மற்றும் உச்சநீதிமன்றம் தலையீடு

இந்த சேகரிப்பு முறையானது இந்திய பங்கு சந்தை விதிமுறைகளுக்குப் புறம்பானதாக இருப்பதை கண்டுபிடித்தது SEBI (Securities and Exchange Board of India). 2011-ல், உச்சநீதிமன்றம் மிகக் கடுமையான தீர்ப்பை வழங்கியது. அதில் சஹாரா நிறுவனம் இந்த பணத்தை முறையற்ற முறையில் பெற்றுள்ளது என்றும் இது சட்டவிரோதமானதாகவும் தெரிவித்தது. மேலும் ரூ.25,000 கோடியை முதலீட்டாளர்களுக்கு திருப்பி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.இந்த பணத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்க இந்தியாவின் நிதி கண்காணிப்பு அமைப்பான SEBI (செபி)-க்கு பொறுப்பு கொடுக்கப்பட்டது. செபி ஒரு இணையதளம் உருவாக்கியது. அறிவிப்புகள் வெளியிட்டது. பணம் திரும்ப பெறும் முறைகளையும் அமைத்தது.

SEBI-யின் நடவடிக்கைகள்

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி:SEBI ஒரு சிறப்பு ஆன்லைன் போர்ட்டல் தொடங்கியது. பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் மூலம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பயனாளர்கள் தங்களை பதிவு செய்து, தேவையான ஆவணங்களை கொடுத்து பணத்தை பெற முடியும் என்ற வாய்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் யாரும் பணம் வாங்க வரவில்லை, இன்று வரை, ₹25,000 கோடியில் இருந்து வெறும் ₹138 கோடி மட்டுமே பயனாளர்களால் பெறப்பட்டுள்ளது. அதாவது 0.55% மட்டுமே!

என்ன காரணங்கள்?

முதலீட்டாளர்கள் பலரும் சிறிய கிராமங்களில் வாழ்கிறார்கள் – இணைய பயன்பாடு தெரியாது, ஆவணங்கள் இல்லை.பலர் வட்டியும் பணமும் சரியாக பெற்றார்களா என்பதை சரிபார்க்க முடியவில்லை.கடவுச்சீட்டு, ஆதார், புகைப்படம் போன்ற ஆதாரங்கள் வழங்க இயலாமல் போனது.

எங்கே போனது இந்த பணம்?

2023-ல் சாரா நிறுவனத் தலைவர் சுப்ரத ராய் மறைந்தார். அதற்குப் பிறகு, இந்த பணத்தை இந்தியக் கூட்டுத் தொகை நிதியத்தில் சேர்த்துவிடலாமா? என மத்திய அரசு சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த நிதி என்பது அரசாங்கம் பொதுவாக பயன்படுத்தும் முக்கியமான நிதியாகும். அதாவது இந்தப் பணம் இனி சாலை கட்ட, மருத்துவம், கல்வி முதலானவற்றிற்கு பயன்படுத்தப்படலாம்.அதில் பல்வேறு தரப்பினருக்கு பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இந்தத் தொகையை முதலீடு செய்தவர்கள் உண்மையில் இருந்தால், அவர்கள் ஏன் தங்கள் பணத்தை பெற வரவில்லை? என்ற கேள்வியே அது. அதேபோல் அந்த முதலீட்டாளர்கள் உண்மையில் இல்லையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.இந்த கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. ஆகவே, இது ஒரு பெரிய நிதி மர்மமாகவே மாறியுள்ளது.இந்திய வரலாற்றில் “சஹாரா வழக்கு” என்பது இன்றும் புரியாத புதிராகவே உள்ளது. ₹25,000 கோடி மக்கள் பணம்… இருந்தும் யாரும் அதை தேட வரவில்லை! இது உண்மையா? கற்பனையா? மோசடியா? என்பதைத் தீர்மானிக்க முடியாத சூழலே நிலவுகிறது.