power cut news: நிலக்கரி பற்றாக்குறை மற்றும் அதிகமான மின்தேவையால், 2022ம் ஆண்டில் இந்தியர்கள் அதிகமான மின்வெட்டை எதிர்கொள்ள நேரிடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன
நிலக்கரி பற்றாக்குறை மற்றும் அதிகமான மின்தேவையால், 2022ம் ஆண்டில் இந்தியர்கள் அதிகமான மின்வெட்டை எதிர்கொள்ள நேரிடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன
உற்பத்தி பாதிப்பு
இந்தியாவின் மின்தேவை கடந்த 38 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதும், நிலக்கரி உற்பத்தி குறைவாக இருப்பதும் மின்வெட்டுக்கு முக்கியக் காரணமாகும். கொரோனாவிலிருந்து பொருளாதாரம் மீண்டுவந்து தற்போதுதான் தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்கள் பணிகளை முழுவீச்சில் தொடங்கியுள்ள நேரத்தில் வரும் மின்வெட்டு அவர்களின் உற்பத்தியை கடுமையாகப் பாதிக்கும்.

மின் தேவை
நாட்டின் மின்தேவை இயல்பைவிட அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் மின்தேவை 1.4% அதிகரித்துள்ளது என்று அரசின் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து ராய்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், அக்டோபர் மாதத்தில் இருந்த மின்பற்றாக்குறையைவிட ஒரு சதவீதம் அதிகமாகவும் இருக்கிறது.மேலும் மார்ச் மாதத்தில் 0.5% அளவுக்கு நிலக்கரி பற்றாக்குறையையும் இந்தியா சந்தித்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்டமொபைல் நிறுவனமான கியா மோட்டார்ஸ், மருந்து நிறுவமான பைஸர் போன்றவை செயல்பட்டு வருகின்றன. ஆனால் அங்கு 8.7% அளவுக்கு மின்பற்றாக்குறை நிலவுகிறது. மாநிலம் முழுவதும் பரவலான மின்பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது.

24 நாட்களுக்கு கையிருப்பு தேவை
அனல் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு ஏப்ரல் 1ம் தேதி நிலவரப்படி 9 நாட்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. இது கடந்த 2014ம் ஆண்டைவிட மிகக் குறைவாகும். ஆனால், விதிமுறைகளின்படி அனல் மின் நிலையங்களில் குறைந்தபட்சம் 24 நாட்களுக்காவது நிலக்கரி இருப்பு வைத்திருக்க வேண்டும்.
ஆந்திராவைச் சேர்ந்த பேக்கர் அலாய் எனும் நிறுவனம் ஆந்திராவில் நிலவும் மின் பற்றாக்குறையால் உற்பத்தியை 50 சதவீதம் குறைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
3 சதவீதம்
குஜராத் மற்றும் மகாராஷ்டிராவிலும் மின்வெட்டு இருந்தாலும் அது சரிசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், ஜார்க்கண்ட், பிஹார், ஹரியானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் 3 சதவீதத்துக்கும் மேலாக மின் வெட்டுஇருக்கிறது.

நிலக்கரி வெட்டி எடுக்கும் இடங்களில் உற்பத்திக் குறைவு, நிலக்கரியை மின்நிலையங்களில் கொண்டு சேர்க்க போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாதது போன்றவை அனல் மின்நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறைக்கு காரணமாகும். இயல்பாக நிலக்கரி கொண்டு செல்ல 453 ரயில்கள் தேவைப்படும் நிலையில் ரயில்வே துறை தினசரி 415 ரயில்கள் மட்டுமே ஒதுக்குகிறது. அதிலும் ஏப்ரல் 1 முதல் 6ம் தேதிவரை நிலக்கரி கொண்டு செல்ல 379 ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இது இயல்பைவிட 16% குறைவாகும்.
கோடை காலம்
இந்தியாவில் மின்தேவ அதிகரிப்பும், மின்வெட்டுக்கு காரணமாக இருக்கிறது. அதிலும் வரும் கோடை காலத்தில் ஏ.சி.யின் பயன்பாடு அதிகரிக்கும்போது, மின்தேவை அதிகரிக்கும். இந்த மின்தேவை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். மின்தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதியை அதிகரிக்கவேண்டியுள்ளது. ரஷ்யா உக்ரைன் இடையே போர் காரணமாக நிலக்கரி விலையும் அதிகரிக்கும். இதனால் வரும் கோடை கால மின்தேவையை மாநில அரசுகள் எவ்வாறு சமாளிக்கப் போகின்றன என்பது கேள்விக்குறியாக இருக்கிறது
