pf for those who earning more than 25000
மாதம் ரூ.25 ஆயிரம் ஊதியம் பெறுபவர்களும் பி.எப். அமைப்பில் இணைப்பது கட்டாயம் என்று கொண்டுவர இ.பி.எப்.ஓ. அமைப்பு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஏறக்குறைய ஒரு கோடி ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
இப்போது மாதம் ரூ.15 ஆயிரம் வரை ஊதியம் பெறுபவர்கள் மட்டுமே பி.எப். அமைப்பில் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பி.எப். அமைப்பின் அறங்காவலர்கள் கூட்டம் கடந்த வியாழக்கிழமை டெல்லியில் நடந்தது. அப்போது, பி.எப்.அமைப்பில் ரூ.25 ஆயிரம் ஊதியம் பெறுவோரையும் சேர்ப்பது குறித்து பேசப்பட்டுள்ளது.
இது குறித்து இ.பி.எப்.ஓ. அறங்காவலர் டி.எல்.சச்தேவ் கூறுகையில், “ மாதம் ரூ.25 ஆயிரம் ஊதியம் பெறுபவர்களும் பி.எப். அமைப்பில் இணைப்பது கட்டாயம் என்பது குறித்த திட்டம் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. ஆனால், போதுமான நேரம் இல்லாததால், அடுத்த கூட்டத்தில் ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால், கூடுதலாக ஒரு கோடி தொழிலாளர்களுக்கு பி.எப். பலன் கிடைக்கும். .
இப்போது மத்திய அரசு 1.6 சதவீதத்தை பி.எப். பென்சன் திட்டம், பி.எப். உறுப்பினர்களுக்கு பங்காக அளிக்கிறது. இதன்படி ஆண்டுக்கு ரூ.6,750 கோடி அளிக்கிறது. ரூ.25 ஆயிரம் ஊதியம் பெறுபவர்களுக்கும் பி.எப் கட்டாயமாக்கும்போது, அரசுக்கு கூடுதலாக ரூ.2,700 கோடி செலவாகும்.
இதன் காரணமாக ஏற்கனவே குறைந்தபட்சம் 20 ஊழியர்கள் இருந்தாலே அவர்களுக்கு பி.எப். திட்டம் அளிக்கப்பட வேண்டும் என்பதை குறைத்து, 10 ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் இருந்தாலே அவர்களுக்கு பி.எப். பலன் கிடைக்க வேண்டும் என்று மாற்றப்பட்டுள்ளது ’’ என்றார்.
