செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வைத்திருத்தல், பரிமாற்றம் செய்தல், மற்றும் பெறுதல் சட்டப்படி குற்றம்,
அதற்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கும் சட்ட மசோதாவை மக்கள் அவையில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நேற்று அறிமுகம் செய்தார்.
‘குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் மசோதா’ என்ற பெயரில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.
அவசரச்சட்டம்
நாட்டில் கருப்புபணம், கள்ளநோட்டுகளை ஒழிக்க ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார்.
அதன்பின் டிசம்பர் 30-ந்தேதி வரை மக்கள் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய காலக்கெடு கொடுக்கப்பட்டது.
அந்த காலக் கெடுக்குள் டெபாசிட் செய்யாமல், கையில் ரூ. 10 ஆயிரத்துக்கு அதிகமாக வைத்திருந்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மத்தியஅரசு அவசரச் சட்டத்தை டிசம்பர் 30ந் தேதி பிறப்பித்தது.
மசோதா
இந்நிலையில், இந்த அவசரச் சட்டத்தை நிரந்தரச் சட்டமாக மாற்ற, ‘குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் மசோதா’ என்ற பெயரில் மசோதாவை நேற்று மக்கள் அவையில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார்.
நாட்டின் நிதிமுறையில் இருந்து, கருப்புபணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில், ரிசர்வ் வங்கியின் மத்திய குழு பரிந்துரையின் அடிப்படையில், ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு மத்தியஅரசால் செய்யப்பட்டது என மசோதாவில் தெரிவிக்கப்பட்டது.
அவகாசம்
மேலும், இந்த ரூபாய் நோட்டு தடை காலத்தில் அதாவது, நவம்பர் 9 முதல் டிசம்பர் 30-ந்தேதி வரை வெளி நாடுகளில் தங்கி இருந்த இந்தியர்கள் தங்களிடம் இருக்கும் செல்லாத ரூபாய்களை மாற்றிக் கொள்ள கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.10 ஆயிரம் அபராதம்
டிசம்பர் 31-ந்தேதியில் இருந்து செல்லாத ரூ.500,ரூ.1000 நோட்டுகளை வைத்திருத்தல், பெறுதல், பரிமாற்றம் செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு வைத்திருப்பவர்களுக்கு முதல் தர மாஜிஸ்திரேட் மூலம் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்திருத்தம்
மேலும், செல்லாத ரூபாய்களை, ரூபாய்கள் குறித்த ஆய்வுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். அதிலும் 25 நோட்டுகளுக்கு அதிகமாக வைத்திருக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934-ல் திருத்தம் கொண்டு வந்து, இந்த மசோதாவுக்கு சட்ட அந்தஸ்து வழங்கப்பட உள்ளது.
எதிர்ப்பு
இந்த மசோதாவை நிதி அமைச்சர் ஜெட்லி தாக்கல் செய்தவுடன், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சுகதா ராய் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து, தாக்கல் செய்யக்கூடாது என்றார்.
இதனால், இருவருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டு அவையில் சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின், சபாநாயகர் மகாஜன் தலையிட்டு தனது சமாதானம் செய்தார்.
தேசவிரோதம்
திரிணாமுல் எம்.பி. சகதா ராய் கூறுகையில், “ ரிசர்வ் வங்கியின் எந்த அறிவிக்கையும் இன்றி, பிரதமர் மோடி ரூபாய் நோட்டு தடையை அறிவித்தது சட்டவிரோதம். இந்த மசோதா தேசவிரோதமானது.
அவையில் உறுப்பினர் அல்லாத ஒருவரால், அவையில் விதிகளை புரிந்துகொள்ள முடியாது'' என்றார்.
சட்டப்படி நடந்துள்ளது
அதற்கு பதில் அளித்த ஜெட்லி, “ சுகதார் ராய் கூறும் பல விசயகள் தவறு. ரூபாய் நோட்டு தடை தொடர்பாக அறிவிக்கை கொடுக்கப்பட்டது. சட்டவிதிகளை பின்பற்றியே அறிவிக்கப்பட்டது'' என்றார்.
