புதுடெல்லி, ஜன. 8-

வங்கிகள், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள நபர்கள் தங்களின் ‘பான் கார்டு’ எண்ணை வரும் அடுத்த மாதம் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் சமர்பிக்க மத்திய வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.

கருப்பு பணத்தை தடுக்கும் விதமாக, செல்லாத ரூபாய் நோட்டு  அறிவிப்பு வெளியான கடந்த ஆண்டு நவம்பர் 8ந் தேதிக்கு முந்தைய வங்கி , தபால் நிலையடெபாசிட்களையும் ஆய்வு செய்ய வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

அதாவது 2016ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து நவம்பர் 8-ந்தேதிக்கு முன்பு வரை வங்கிகள், தபால் நிலையங்களில் செய்யப்பட்ட டெபாசிட்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

நாட்டில் கருப்பு பணத்தையும், கள்ளநோட்டுகளையும் ஒழிக்க பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். அதைத் தொடர்ந்து கருப்புபணத்தை பிடிக்கும் நடவடிக்கைகளை வருமான வரித்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதில் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு காலத்தில் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் லட்சக்கணக்கில் திடீரென செய்யப்பட்ட டெபாசிட்கள், சேமிப்பு கணக்குகளில் நவம்பர் 9-ந்தேதிக்கு பின் டிசம்பர் 30ந்தேதி வரை ரூ.2.5 லட்சம் வரை செய்யப்பட்டடெபாசிட்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கருப்புபணம் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தி, விரைவுப்படுத்தும் விதமாக  வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்கள் கணக்கில் நவம்பர் 9-ந்தேதிக்கு பின் ரூ.2.5 லட்சம் வரை டெபாசிட் செய்யப்பட்டு இருந்தால் அவர்களின் கணக்கில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் நவம்பர் 9 ந்தேதி வரை செய்யப்பட்ட டெபாசிட்குறித்தும் ஆய்வு செய்ய வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.

இதற்காக வங்கிகள், தபால்நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களின் பான்கார்டு எண், படிவம் 60 ஆகியவற்றை கேட்டு வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் அனைவரும் வரும் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் தங்களின் பான்கார்டு எண்ணை அளிக்கவும் வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின் ஒருவர் கணக்கில் செய்யப்பட்ட டெபாசிட் குறித்தும், செல்லாத ரூபாய் அறிவிப்புக்கு முன் அவர்கள் கணக்கில் இருப்பில் இருந்த பணத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து நோட்டீஸ் அனுப்ப வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து வங்கிகள் , தபால்நிலையங்களுக்கும் கடந்த 6-ந்தேதி நிதி அமைச்சகத்தின் ேநரடி வரிகள் வாரியம் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, வங்கி, தபால்நிலையங்களில் பான்கார்டு எண் கொடுக்காதவர்கள் தங்கள் பான்கார்டு எண்களை உடனடியாக கொடுக்க வேண்டும். சில வங்கியில் கணக்குதொடங்கும்போது, பான்கார்டு முறை அறிமுகம் இல்லாத நிலையில் இருந்தாலும், அவர்களும் இப்போது தங்களின்  பான்கார்டு எண்களை உடனடியாக வங்கியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.