நாட்டின் குறைந்த விலை ஆடம்பர எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்த மினி
மினி கூப்பர் SE எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.
பி.எம்.டபிள்யூ. குழுமம் இந்தியாவில் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இம்முறை மினி கூப்பர் SE எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய மினி கூப்பர் SE மாடல் CBU (completely Built Unit) முறையில் இந்தியா கொண்டுவரப்படுகிறது.
புதிய மினி கூப்பர் SE மாடலின் விலை ரூ. 47.20 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் ஆடம்பர எலெக்ட்ரிக் வாகனங்களில் குறைந்த விலை மாடலாக புதிய மினி கூப்பர் SE அறிமுகமாகி இருக்கிறது. இது மினி கூப்பர் ஸ்டாண்டர்டு மாடலை விட ரூ. 8.2 லட்சம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டே மினி எலெக்ட்ரிக் மாடலுக்கான இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டது.
மேலும் மினி எலெக்ட்ரிக் மாடலுக்கான முன்பதிவும் துவங்கியது. முன்பதிவிலேயே அனைத்து யூனிட்களும் விற்றுத்தீர்ந்தது. வெளிப்புற தோற்றத்தில் புதிய மினி கூப்பர் SE முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த மாடலின் கிரில் மற்றும் ORVM-களில் பிரைட் எல்லோ அக்செண்ட்கள் செய்யப்பட்டு, புதிதாக E-பேட்ஜ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 17 இன்ச் ஸ்போக் அலாய் வீல்கள் உள்ளன.
கேபின் பார்க்க ஸ்டாண்டர்டு மினி கூப்பர் போன்றே காட்சியளிக்கிறது. இதன் மத்தியில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஹார்மன் கார்டன் ஆடியோ யூனிட், புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஹெட்-அப் டிஸ்ப்ளே, மல்டி-ஃபன்ஷன் ஸ்டீரிங் வீல், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
மினி கூப்பர் SE மாடலில் ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 181 ஹெச்.பி. திறன், 270 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 32.6 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 270 கிலோமீட்டர் வரை செல்லுலம் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும்.
புதிய மினி எலெக்ட்ரிக் காரை முழுமையாக சார்ஜ் செய்ய 3.5 மணி நேரம் ஆகும். இந்த காரை வாங்குவோருக்கு 11 கிலோவாட் AC வால்பாக்ஸ் சார்ஜர் வழங்கப்படுகிறது.