Exit Polls Results 2024 எதிரொலி: பங்குச்சந்தையில் காளைகள் குதியாட்டம்!
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை மிகப்பெரிய ஏற்றத்தை கண்டுள்ளன
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இறுதி மற்றும் 7ஆவது கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
முன்னதாக, மக்களவை தேர்தலின் அனைத்து கட்ட வாக்குப்பதிவுகளும் முடிவடைந்ததையடுத்து, பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியாகின. அதில், பாஜக கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் கணித்துள்ளன.
கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்தால், அரசியல் ஸ்திரத்தன்மையின் மீது நம்பிக்கை காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே, இன்று காலை இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கின.
மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்களான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் இன்று அதிகபட்ச உச்சத்தை எட்டின. சந்தை தொடங்குவதற்கு நிஃப்டி 800 புள்ளிகள் அல்லது 3.58 சதவீதம் உயர்ந்து 23,227.90 ஆகவும், சென்செக்ஸ் 2,621.98 புள்ளிகள் அல்லது 3.55 சதவீதம் உயர்ந்து 76,583.29 ஆகவும் இருந்தது.
சந்தை நேரம் தொடங்கியதும், 30-பங்குகளின் சென்செக்ஸ் 2,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது, அதேசமயம், 50 பங்குகள் கொண்ட நிஃப்டி சந்தை தொடக்கத்தின் போது நான்கு ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைத்தது. அதாவது சந்தை தொடங்கும் போது நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிஃப்டி ஏற்றத்துடன் வர்த்தகமாகியது.
அதானி போர்ட்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், பவர் கிரிட், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், மற்றும் என்டிபிசி ஆகியவை கணிசமான லாபத்துடன் சந்தையில் முன்னணியில் உள்ளன. முன்னதாக, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் காலாண்டு முடிவுகளும் இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சியை உணர்த்தும் வகையில் உள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.